கைப்பற்றிய நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் வழங்க சீனா ஒப்புதல்

தென் சீனக்கடலில் கைப்பற்றிய ஆளில்லா நீர்முழ்கியை சீனா, அமெரிக்காவுக்கு திருப்பியளிப்பதற்கான புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவின் இந்த நீழ்மூழ்கியை சர்வதேச கடற்பரப்பில் வியாழக்கிழமை சீனா கைப்பற்றியது.

எதற்காக கைப்பற்றியது என்று காரணம் கூறாத சீனா, இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்குவதாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனா அதனை திருடியிருப்பதாக கூறிருக்கிறார்.

சீனா திருடிய அந்த நீர்மூழ்கி நமக்கு வேண்டாம். அந்த நாடே வைத்து கொள்ளட்டும் என்று அமெரிக்கா தெரிவித்துவிடலாம் என்று டிரம்ப் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனை தான் பல தசாப்தங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான மிக கடுமையான ராணுவ ரீதியில் எதிரெதிராக மோதுகிற சம்பவமாகும்.

நீருக்கடியில் செயல்படும் ஆளில்லா வாகனம் என்று அறியப்படும் இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டபோது, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்ததாக கூறியிருக்கும் பென்டகன், அதனை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஆனால், இது தொடர்பாக புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார்,

சீன ஆட்சியாளர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு, இந்த ஆளில்லாத நீருக்கடியில் செயல்படும் வாகனத்தை சீனா திருப்பி கொடுப்பதற்கு புரிதலை உருவாக்கியுள்ளதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்திருக்கிறார்.

இந்த நீர்மூழ்கி "பொருத்தமான முறையில்" திருப்பி வழங்கப்படும் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால எப்போது வழங்கப்படும் எனத் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்