தென் கொரிய அதிபருக்கு தொடரும் நெருக்கடி: தோழியின் மகள் கைது

பதவியைப் பயன்படுத்தி, தனது தோழிக்கு ஆட்சியில் செல்வாக்கு செலுத்த இடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹே ஆளாகியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அவரது தோழியின் ஒரே மகள் டென்மார்க்கில் கைது செய்யப்பட்டிருப்பது இந்த சர்ச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜங் யு ரா, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்

குதிரை சவாரியில் பதக்கங்கள் பெற்றிருக்கும் 20 வயதாகும் ஜங் யு ரா, டென்மார்க்கில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டார்.

தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தென் கொரிய பல்கலைக் கழகத்தில் அவர் இடம் பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து, தென் கொரிய வழக்கறிஞர்கள் அவரிடம் விசாரணை மேற்கொள்ள விரும்புகின்றனர்.

ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அவர் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

அவரின் தாயார் பணம் பறிப்பதற்காகவும் தனது காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும் அதிபர் பாக் குன் ஹேவின் நட்பைப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP/getty
Image caption ஜங் யு ராவின் தாய் சுவே சூன் ஷில்

ஆனால் இருவரும் அதை மறுத்துள்ளனர்; இந்த குற்றச்சாட்டுக்களால் தென் கொரியாவில் பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த மாதம் தென் கொரிய நாடாளுமன்றம் அதிபரை விசாரிக்க வேண்டும் என்று வாக்களித்தது.

அரசியலமைப்பு நீதிமன்றம் இந்த வழக்கு மேலும் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவுள்ளது.