இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாகூர் விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாகூர் விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அனுராக் தாகூர்: அதிகாரம் பறிப்பு

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக கூறப்பட்ட புகாரில் கிரிக்கெட் வாரியத்தில் பல மாற்றங்களை கொண்டு வர உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பிசிசிஐ செயலர் அஜெய் ஷிரிகேவும் பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐக்கு புதிய தலைவரும் புதிய செயலரும் நியமிக்கப்படும் வரை இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாகத்தை கவனிக்க கண்காணிப்பாளர்களை நீதிமன்றம் நியமனம் செய்யும்.

பிசிசிஐயின் நிர்வாகம் குறித்து விசாரிக்க 2015 ஆம் ஆண்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு போட்டிகளில் நடைபெற்ற தவறுகளை விசாரித்த தனிக்குழுவின் விசாரணையை தொடர்ந்து லோதா கமிட்டி அமைக்கப்பட்டது.

ஜனவரி 2016 ஆம் ஆண்டு லோதா கமிட்டி தனது பரிந்துரையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீதிபதி லோதா

அதில் பல பரிந்துரைகளை நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. மேலும் அதை அமல்படுத்த பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கிரிக்கெட் வாரியம் வர வேண்டும், தொடர்ந்து இரண்டு முறை பதவியிலிருக்கும் எந்த ஒரு அதிகாரியையும் தடை செய்ய வேண்டும் மற்றும் அரசு அமைச்சர்கள் பிசிசிஐ யின் தேர்தலில் பங்கெடுக்க கூடாது ஆகியவை பிசிசிஐ யின் பரிந்துரைகளில் சில

ஆனால் இதுப்பற்றி பல முறை நினைவு கூர்ந்தும் பிசிசிஐயால் இறுதி தேதிக்குள் பரிந்துரைகளின் படி செயல்பட முடியவில்லை என்பதால் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

"இதுதான் நடந்திருக்கக்கூடிய விளைவு. நீதிமன்றத்தினால் பரிந்துரைகள் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு அது அமல்படுத்தப்பட வேண்டும். சில தடைகள் மற்றும் இடையூறுகள் இருந்தன. நிச்சயமாக எது நடைபெறவேண்டுமோ அது நடைபெற்றுள்ளது" என நீதிபதி லோதா தெரிவித்துள்ளார்.

"இது கிரிக்கெட்டிற்கு கிடைத்த வெற்றி. மேலும் நிர்வாகிகள் மாறுவதற்கான வாய்ப்புகளை தரும் அது கிரிக்கெட்டிற்கு நன்மை பயக்கும்" என லோதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்