டாக்கா உணவக தாக்குதலின் முக்கிய நபர் கொலை

20 பிணைக் கைதிகள் கொல்லப்பட்ட, வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள உணவகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption டாக்கா உணவகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இஸ்லாமிய அரசு குழுவினர் ஈடுபட்டதை வங்கதேச அதிகாரிகள் மறுத்துள்ளனர்

நுருல் இஸ்லாம் மர்ஸானும், அடையாளம் காணப்படாத ஒருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் டாக்காவில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதத் தடுப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனைக்கு பின்னர் இவர்கள் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்ற மிகவும் மோசமான தாக்குதலாக கருதப்படும் டாக்கா உணவகத் தாக்குதலில், பிணைக் கைதிகள் சுட்டு அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் நாள், குல்ஷான் சுற்றுவட்டாரத்திலுள்ள கோலே ஆர்டீசியன் உணவகத்தில், 12 மணிநேர முற்றுகைக்குப் பின்னர், அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டனர். இரண்டு காவல்துறையினரும், ஆறு தீவரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தடைசெய்யப்பட்டுள்ள ஜமாத்-உல் முஜாஹிதீன் தீவிரவாதக் குழுவை சேர்ந்த மூத்த நபரான மர்ஸான், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவராக நம்பப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டாக்கா உணவகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர், வங்கதேசம் 2 நாட்கள் துக்கம் அனுசரித்தது

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாக்காவுக்கு அருகில் காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையின்போது கொல்லப்பட்ட, வங்கதேச வம்சாவழி கனடியரான தமிம் அகமது சௌத்ரியோடு திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

கறுப்பு கொடியுடன் கூடிய தாக்குதலாளர்களின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு பொறுபேற்றது.

ஆனால், இஸ்லாமிய அரசு குழுவினர் வங்கதேசத்தில் இல்லை என்று நீண்டகாலமாக வலியுறுத்தி கூறிவருகின்ற அதிகாரிகள், ஜமாத்-உல் முஜாஹிதீன் அமைப்பு தான் முக்கியமாக குற்றம் சுமத்தப்பட வேண்டியது என்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில், ஜமாத்-உல் முஜாஹிதீன் அமைப்பின் பல மூத்த உறுப்பினர்கள் உள்பட டஜன்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் அரேபிய மொழி படித்து, படிப்பை பாதியில் விட்ட பின்னர், 30 வயதான மர்ஸான், 2015 ஆம் ஆண்டு, ஜமாத்-உல் முஜாஹிதீன் அமைப்பின் கிளை ஒன்றில் சேர்ந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்