புர்காவுக்கு மொராக்கோவில் தடை

  • 11 ஜனவரி 2017

மொராக்கோவில் புர்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல நாடுகளில் இஸ்லாமியப் பெண்கள் புர்க்கவை அணிகின்றனர்

அதேபோல் புர்கா தயாரிப்பு மற்றும் இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தடை குறித்த கடிதங்கள் கடந்த திங்கள்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தம்மிடமுள்ள புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை அரச தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதேசமயம் இந்த முடிவு "பாதுகாப்பு காரணங்களுக்காக" எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனாலும், இப்போது மொராக்கோ புர்காவை முற்றாக தடைசெய்யவுள்ளதா என்பது குறித்து தெளிவாக்கப்படவில்லை.

"கொள்ளையர்கள் பிரச்சினை"

கொள்ளையர்கள் குற்றச்செயல்களை புரிவதற்கு புர்காக்களை பயன்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உள்ளூர் செய்தி இணையத்திடம் கூறியுள்ளார்.

முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் புர்கா, மொராக்கோவில் பரவலாக அணியப்படுவதில்லை. அங்குள்ள பெண்கள் முகத்தை மறைக்காத ஹிஜாபையே விரும்புகின்றனர்.

இதேவேளை நாட்டின் வடபகுதியிலுள்ள பழைமைவாத பிரதேசங்களில் சலாஃபிஸ்ட் சிந்தாந்தங்களை பின்பற்றும் பெண்கள், கண்களைத் தவிர முகத்தின் இதர பகுதிகளை மறைக்கும் நிகாபை அணிகின்றனர்.

பிபிசி படத்தின் காப்புரிமை AFP
Image caption மொராக்கோவின் மன்னர் மிதவாத இஸ்லாத்தை ஆதரிக்கிறார்

புர்கா முற்றாகத் தடை செய்யப்படக்கூடும் என்கிற தகவல் வட ஆப்ரிக்க முடியரசு நாடான மொராக்கோவில் முரண்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவும்-எதிர்ப்பும்

நாட்டின் மன்னர் ஆறாவது முகமது, மிதவாத இஸ்லாத்தையே ஆதரிக்கிறார்.

ஆனால் இது ஏற்புடையதல்ல என்று மதப்பிரச்சாரகரான ஹம்மாத் கப்பாஜ் கூறுகிறார். அவரது தீவிரவாதத் தொடர்புகள் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

புர்காவை தடை செய்வது, மொராக்கோவின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மீறும்செயல் என்றும், மேற்கத்திய பாணியில் நீச்சல் உடை அணிவது தடுக்க முடியாத உரிமையாக அரசு கருதுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

அதேபோல் வடமொராக்கோ தேசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் எனும் அமைப்பும் அரசின் முடிவு "தன்னிச்சையானது, அது பெண்களின் கருத்துரிமையில் நேரடியாக தலையிடுகிறது" எனக்கூறி அவர்கள் தமது மதம், அரசியல் மற்றும் சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் உடை அணிவதற்கு உரிமை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் நாட்டின் குடும்ப மற்றும் சமூக அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் நௌஷா ஸ்காலி இதை வரவேற்றுள்ளார். மதத் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில், புர்கா தடை முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : http://bit.ly/2jdnKzC

ட்விட்டரில் எங்களை பின்தொடர : http://bit.ly/2iXJrnq

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : http://bit.ly/2jdpZ61

யூ ட்யூபில் காண ; http://bit.ly/2j0ERoy

தொடர்புடைய தலைப்புகள்