ரொஹிஞ்சா பிரச்சனை - உண்மைகள், பொய்கள் மற்றும் ஆங் சான் சூ சி குறித்த பிம்பம்

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மரில் சிறுபான்மையினரான ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினர் மீது அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் நடைபெற்றனவா என்பது குறித்து விசாரித்து வந்த அரசு நியமித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கையின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

படத்தின் காப்புரிமை EPA
Image caption ரொஹிஞ்சா பகுதிகளில் நடந்தவை வெளிக் கொணரப்படுமா?

ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினர் அதிகம் வாழ்ந்து வந்த வடக்கு ரக்கீன் மாநிலத்தில் நுழைய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தங்கள் படையினர் குடிமக்களை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், கொலை செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பதில் கூற மியான்மர் அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றது.

ரக்கீன் மாநிலத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அங்கு வாழும் குடிமக்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிந்து கொள்ளவும் தாங்கள் ஆர்வமாக இருப்பதாக நமது வாசகர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் அறிந்து கொண்டு தெரிவிக்க மியான்மரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜோனா ஃ பிஷரை அனுப்பினோம்.

படத்தின் காப்புரிமை Empics
Image caption ரொஹிஞ்சா முஸ்லீம்களின் உண்மை நிலை என்ன?

டிரம்ப் - ஆங் சான் சூ சி இடையேயான பொதுவான அம்சம்

70 வயதின் ஆரம்பத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் மியான்மர் நாட்டு தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆங் சான் சூ சி ஆகிய இருவருக்கும் உள்ள ஒரு பொதுவான அம்சம் , அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்கள் குறித்த ஒரு வலுவான வெறுப்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுவதுதான்.

ஊடகங்களுடன் டிரம்ப் கொண்டுள்ள கொந்தளிப்பான உறவு குறித்து பல முறைகள் விரிவாக அலசப்பட்டுள்ளது.

இதே போன்ற ஒரு விஷயத்தில் ஆங் சான் சூ சி பெயரும் வருவது வியப்பாக இருக்கலாம்.

ஊடகங்களிடம் நெருக்கமாக உள்ளவரா ஆங் சான் சூ சி?

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஜனநாயகத்தின் அடையாளமாக அறியப்பட்ட ஆங் சான் சூ சி

'தி லேடி' என்று மியான்மரில் அழைக்கப்படும் ஆங் சான் சூ சி, 1990-களில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக அறியப்பட்டு பிரபலமானவர்.

ரங்கூனில் ராணுவத்தால் கட்டாய வீட்டுச் சிறை வைக்கப்பட்ட சூ சி, ராணுவத்தை எதிர்த்த தனது துணிச்சல் கதையை வெளியில் கூற, அவரை சந்திக்க முற்பட்ட பத்திரிக்கையாளர்கள் பல சவால்களையும், ஆபத்துக்களையும் எதிர் கொண்டனர்.

ரொஹிஞ்சா முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்: விசாரணை அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

ஆனால், தற்போது ஆங் சான் சூ சி பதவியில் இருக்கும் போது விஷயங்கள் முற்றிலும் வேறாக உள்ளன.

Image caption வங்கதேசத்தில் ஏராளமான ரொஹிஞ்சா முஸ்லீம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்

பர்மிய பத்திரிக்கைகளுக்கு எப்போதும் ஆங் சான் சூ சி பேட்டி அளிப்பதில்லை. மியான்மர் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தொடர்ச்சியான கேள்விகள் எதுவும் கேட்கப்படுவதில்லை. 14 மாதங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலுக்கு முன் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர முறையான பத்திரிக்கையாளர் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.

நாட்டின் அதிபரை விடவும் உயரிய பொறுப்பில், மக்களுக்கு அழைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனக்காக ஒரு சக்தி வாய்ந்த மற்றும் பலம் பொருந்திய அரசு ஆலோசகர் என்றறியப்பட்ட பொறுப்பை அவர் உருவாக்கினார்.

ரொஹிஞ்சா முஸ்லீம்களின் உண்மை நிலை என்ன?

தினசரி அடிப்படையில் பார்த்தால், மியான்மரில் இன ரீதியான சிறுபான்மையினரான ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினரின் நிலை குறித்து வெளிவரும் சர்வதேச ஊடக செய்திகளுக்கு மியான்மர் அரசால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மியான்மரில் ஏறக்குறைய ஒரு மில்லியன் (10 லட்சம்) ரொஹிஞ்சா முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். பல தசாப்தங்களாக இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Image copyright
Image caption ரொஹிஞ்சா பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு தடை

கடந்த மூன்றரை மாதங்களாக வடக்கு ரக்கீன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் கடுமையான ராணுவ ஒடுக்குமுறையை ஆளாக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் அங்கு என்ன நடந்து வருகிறது என்பது ஒருபுறமிக்க, இவர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக அரசு கூறி வருகிறது. நீங்கள் எதை நம்ப வேண்டும் என்பது நீங்கள் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது.

மியான்மர் ராணுவம் இன அழிப்பு மற்றும் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய சிலரின் கூற்றுக்களை அந்நாட்டின் ராணுவம் மறுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆங் சான் சூ சி, போலீஸ் புறக்காவல் நிலையங்கள் மீது மோதலை முதலில் ஆரம்பித்த ரொஹிஞ்சா பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இதுவென குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரொஹிஞ்சா பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பர்மிய ராணுவம்

ஆபூர்வமான ஒரு பேட்டி

இச்சூழலில், கடந்த வாரத்தில் ரக்கீன் மாநில அரசிடமிருந்து மோதல் நடந்த பகுதிகளுக்கு செல்ல இறுதியாக பிபிசிக்கு அனுமதி கிடைத்தது வியப்பான ஒரு அம்சம் தான்.

பல மணி நேர பயணம் மற்றும் காத்திருப்புக்கு பிறகு, எங்களை தடுத்து நிறுத்தும்படி அரசிடமிருந்து வந்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தினர்.

ஒரு உள்ளூர் அதிகாரி எங்களுக்கு ஒரு நேர்முக பேட்டி அளிக்க வந்ததே வெற்றியாக கருத வேண்டும்.

இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாத்த துவக்கத்தில் ரக்கீன் மாநிலம் மற்றும் ரொஹிஞ்சா முஸ்லீம்களின் உண்மை நிலை குறித்து நாம் பேச எடுத்த பல முயற்சிகளையும் ஆங் சான் சூ சியம் அவரது பேச்சாளரும் மறுத்து விட்டனர்.

பேட்டி அளிக்க கோரி ஆங் சான் சூ சியின் பேச்சாளருக்கு பல முறைகள் நாம் அனுப்பிய குறுந் தகவல்களுக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும், அலுவலில் இருப்பதாகவும் பதில் வந்தது.

Image caption பிபிசி செய்தியாளர் ஜோனா மற்றும் சூ சியின் பேச்சாளருக்கு இடையே நடந்த குறுந்தகவல் பரிமாற்றம்

அத்துமீறல் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? வதந்தியா?

வடக்கு ரக்கீன் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மருத்துவரான தான் ஹூடுட் யாவ், புத்த மதத்தை பின்பற்றும் ஒரு பர்மியவாசி ஆவார்.

அவருடன் பேசிய போது , மற்ற பர்மியர்களை போலவே ரொஹிஞ்சா முஸ்லீம்களின் மீது அத்துமீறல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுவது ஜோடிக்கப்பட்டது என அவர் நம்புகிறார்.

''இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாட்டில் நடப்பது குறித்த முழு உண்மைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. பர்மிய புத்த முறை பாலியல் வல்லுறவை அனுமதிப்பதில்லை. இவை எல்லாம் வெறும் வதந்திகள்'' என்று அவர் மேலும் கூறினார்.

Image caption ரொஹிஞ்சா முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்: விசாரணை அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

ஆனால், இவை உண்மையா, வதந்தியா என்று நிரூபிப்பது மிகவும் சிரமம். மோதல் நடந்த இடத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் உதவி தொழிலாளர்களை அனுமதிக்காத சமயத்தில், அங்குள்ள நிகழ்வுகளை அரசு மட்டுமே வெளியிட்டு வருகிறது.

ஆங் சான் சூ சியின் செயல்பாடுகளும், மியான்மர் அத்துமீறல்கள் குறித்த பிரச்சாரமும்

இந்த பிரச்சனை குறித்து ஆங் சான் சூ சியின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தின் பலனை, பிரிட்டன் போன்ற சில நாடுகள் அவருக்கு அளித்துள்ளன.

சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க போராடியவர் ஆங் சான் சூ சி என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆங் சான் சூ சியின் குறித்த பிம்பம் மாறுகிறதா?

மேலும், மியான்மரின் நடைமுறையின் தலைவர் ஆங் சான் சூ சி என்ற இந்த பதவியில் புதிதாக அமர்ந்துள்ளார் என்பதையும், அரசியலமைப்பு ரீதியாக அவர் நாட்டின் ராணுவத்தையோ அல்லது போலீஸ் துறையையோ கட்டுப்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

முயற்சி செய்திருந்தாலும் ரக்கீன் மாநிலத்தில் நடக்கும் ராணுவ நடவடிக்கையை அவரால் தடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மியான்மரின் மிகச் சிறந்த நம்பிக்கை ஆங் சான் சூ சி தான்.

ஆனால், அவரின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சகங்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டதாக கூறும் மக்கள் தெரிவிக்கும் கூற்றுக்களை குப்பையென ஒதுக்குகின்றனர். மேலும், பர்மிய ராணுவம் வெளியிடும் அத்துமீறல் மறுப்புக்களை இவர்களும் திரும்ப கூறுகின்றனர்.

கண் துடைப்பு விசாரணை அறிக்கையா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அகதிகளாக பல இடங்களில் வாழ்ந்து வரும் ரொஹிஞ்சா முஸ்லீம்கள்

மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினருக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கை வெளியீடை மியான்மர் அரசு செவ்வாய்க்கிழமையன்று ஒத்தி வைத்துள்ளது.

ஒரு முன்னாள் ராணுவ தளபதியின் தலைமையில் செயல்படும் இந்த விசாரணை ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கை ஒரு கண் துடைப்பாக அமையலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு ரக்கீன் மாநிலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகள் எக்காலத்திலும் வெளிப்படுத்தப்படாமல் போகலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்