டிரம்ப் உத்தரவுக்கு பணிய மறுத்த தலைமை வழக்கறிஞர் நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , குடியேற்றத் தடை உத்தரவை ஏற்க மறுத்த அரச தலைமை வழக்கறிஞரை பதவி நீக்கம் செய்திருக்கிறார்.

அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்றால் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'யேட்ஸ் அம்மையார் நீதித்துறைக்கு ''துரோகம்'' செய்து விட்டார்'-வெள்ளை மாளிகை (ஆவணப்படத்தில் முதலில் அமர்ந்திருப்பவர் சேலி யேட்ஸ்)

சேலி யேட்ஸ் என்ற அந்த அரச தலைமை வழக்கறிஞர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுக்கு பணிய மறுத்த தலைமை வழக்கறிஞர் நீக்கம்ரம்ப் நிர்வாகம் அறிவித்த குடியேற்றத்தடை உத்தரவின் சட்டபூர்வத் தன்மை குறித்த வழக்குகளில், அரசுக்கு ஆதரவாக வாதாட வேண்டாம் என்று அமெரிக்க நீதித்துறையில் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குள், பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

சேலி யேட்ஸ் , முந்தைய அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவகாசம் கொடுத்திருந்தால் கெட்ட மனிதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருப்பார்கள் : டிரம்ப்

யேட்ஸ் அம்மையார் நீதித்துறைக்கு ''துரோகம்'' செய்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது.

வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க அரச வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் டானா பொயண்ட்டே இப்போது தற்காலிக அரச தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

அதிபர் டிரம்ப் பிறப்பித்த சர்ச்சைக்குரிய இந்த நிர்வாக ஆணை, ஏழு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் பிரஜைகள், அமெரிக்காவுக்கு வருவதைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கிறது. இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவிலும் பல வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

அதிபர் பிறப்பித்த உத்தரவு சட்டபூர்வமானதுதானா என்பது குறித்த்து தான் திருப்தியடையவில்லை என்று ஒரு கடிதத்தில் யேட்ஸ் கூறியிருக்கிறார்.

'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

''நான் தற்காலிக அரச தலைமை வழக்கறிஞராக இருக்கும் வரை, இந்த நிர்வாக ஆணையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி எனது துறை வாதங்களை முன்வைக்காது'', என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் சேலி யேட்ஸ் '' அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ உத்தரவை அமல்படுத்த மறுத்ததன் மூலம் நீதித்துறைக்கு துரோகம் செய்துவிட்டார்'', என்று வெள்ளை மாளிகை கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிரம்ப் உத்தரவுக்கு பணிய மறுத்ததால் நீக்கப்பட்ட சேலி யேட்ஸ்

அமெரிக்க விசா அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?

'' அதிபர் டிரம்ப் யேட்ஸை பதவியிலிருந்து அகற்றிவிட்டார்'' , என்ரு அவரது ஊடகச் செயலரிடமிருந்து வந்த அறிக்கை ஒன்று கூறியது.

அவருக்கு அடுத்து வரும் போயண்டேயும் பராக் ஒபாமா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்தான்.

அவரது நியமனம் 2015ல் அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த புதிய பதவிக்கு அவர் தகுதியுள்ளவராகிறார்.

டிரம்பின் செயலாணைக்கு வலுக்கும் எதிர்ப்பு

டிரம்ப் நிர்வாகம் நியமித்துள்ள புதிய அரச தலைமை வழக்கறிஞரின் நியமனம் இன்னும் செனட்டால் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவரால் தலைமை அரச வழக்கறிஞர் பதவிக்கு நியமிக்கப்பட்ட செனட் உறுப்பினர் ஜெஃப் செஷன்ஸ் இந்த வாரம் பின்னதாக செனட்டால் விசாரிக்கப்படுவார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராஜதந்திரிகளும், ராஜீய அலுவலர்களும், இந்த நிர்வாக ஆணையிலிருந்து கருத்து முரண்படும் ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரைவு அறிக்கை டிரம்ப்பின் நிர்வாக ஆணையை முறையாக விமர்சிக்கும்.

ஆனால் ராஜீய அலுவலர்கள் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஷான் ஸ்பைசர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே, தங்களுக்கு அடுத்துவரும் அதிபர்களின் நடவடிக்கையை முன்னாள் அதிபர்கள் விமர்சிக்காமல் இருக்கும் நடைமுறையை மீறி , முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்த சர்ச்சை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து தான் '' மகிழ்ச்சி அடைவதாக'' ஒபாமா கூறினார்.

''தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற நோக்கில், குடிமக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும், அணி திரளும் உரிமையைப் பயன்படுத்துவது, அமெரிக்க விழுமியங்கள் நெருக்கடியில் வரும்போது அவர்கள் செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்தான்'' , என்று ஒபாமா கூறினார்.

ஆனால் ஒபாமா இந்த அறிக்கையில் டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்