சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திலிருந்து விலக ஆப்ரிக்க ஒன்றியம் பரிந்துரை

ஆப்ரிக்க நாடுகள் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதற்கு அழுத்தம் தரும் ஒரு திட்டத்தை ஆப்ரிக்க ஒன்றியம் ஆதரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Anadolu Agency/Gettyimages
Image caption ’சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் ஆப்ரிக்காவை நியாயமற்ற வகையில் குறிவைக்கிறது’

இந்த நீதிமன்றம் ஆப்ரிக்கக் கண்ட நாடுகளை நியாயமற்ற வகையில் இலக்கு வைப்பதாக பல ஆப்ரிக்க நாடுகள் நம்புகின்றன.

ஆப்ரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டின்போது, ரகசியமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு சட்டபூர்வமாக கட்டுப்படுத்தக்கூடியதல்ல.

இந்த நீதிமன்றம், டார்ஃபூர் துஷ்பிரயோகங்கள் விஷயத்தில் சூடான் அதிபர் ஒமார் அல்-பஷீரையும், கென்யாவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டாவையும் இலக்குவைத்ததன் மூலம் , தனக்கு வகுக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிவிட்டது என்று ஆப்ரிக்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆப்ரிக்க நாடுகள் தங்களது நீதிமன்ற அமைப்புகளை வலுப்படுத்துவதையும் , ஆப்ரிக்க நீதி மற்றும் மனித உரிமைக்கான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதையும் இத்திட்டம் பரிந்துரைக்கிறது.