சீனாவில் மாசுபாட்டை தடுக்கும் பசுமை கட்டிடங்கள்

படத்தின் காப்புரிமை Stefano Boeri Architetti
Image caption 1000 மரங்களையும், 2500 குறுஞ்செடிகளையும், காற்றில் இருக்கும் மாசுபாடுகளை உறிஞ்சி, வடிகட்டி சுத்தப்படுத்த உதவுகின்ற புதர்களையும் கொண்டிருக்கும் கட்டடம்

இந்த ஆச்சரியமூட்டும் கட்டடங்கள் சீனாவின் மாசுபாடு பிரச்சனைகளை சமாளிக்க உதவலாம்.

உலகிலேயே மிக பெரும் அளவில் மாசுபாடு பிரச்சனையை கொண்டிருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று.

மாசுபாடுகளில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காகவே தகவமைக்கப்பட்ட சிறப்பு முகமூடிகளை சீனாவில் பலரும் அணிந்து வருகின்றனர்.

மாசுபாடுகளை தடுக்க உதவும் தாவரங்கள் நிறைந்திருக்கும் கட்டடங்களை உருவாக்கும் பரிந்துரையை இத்தாலிய கட்டடக்கலைஞர் ஸ்டெஃபானோ போரி வழங்கியுள்ளார்.

1000 மரங்களையும், 2500 குறுஞ்செடிகளையும், காற்றில் இருக்கும் மாசுபாடுகளை உறிஞ்சி, வடிகட்ட உதவி சுத்தப்படுத்துகின்ற புதர்களையும் இந்த இரண்டு சிறப்பு கட்டிடங்களும் கொண்டிருக்கும்.

படத்தின் காப்புரிமை Stefano Boeri Architetti
Image caption இத்தாலிய கட்டடக்கலைஞர் ஸ்டெஃபானோ போரி பரிந்துரைத்த மாசுபாடுகளை தடுக்கும் வகையிலான கட்டடம்

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் கட்டப்படவுள்ள இந்த கட்டடங்களின் பணிகள், 2018 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையவுள்ளன.

சிறிய கட்டடம் ஹோட்டலாக அமையவுள்ள நினையில், பெரியதில் ஒரு அருங்காட்சியகமும், அலுவலகங்களும் கட்டடக்கலை கல்லூரியும் வரவுள்ளன.

ஆசியாவில் இது மாதிரியான கட்டடங்களை கட்டுவது இதுவே முதல்முறையாகும். ஆனால், ஏற்கெனவே இத்தாலியிலும், சுவிட்சர்லாந்திலும் இருக்கின்ற இரு கட்டடங்களோடு இதுவும் ஒன்றாக இணைய இருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP/Getty
Image caption சீனாவின் நான்ஜிங் நகரத்தில் கட்டப்படவுள்ள இந்த கட்டடங்களின் பணிகள், 2018 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்

சொங்சிங், ஷிஜியாசுவாங், லியுசொள, குய்சௌ மற்றும் ஷாங்காய் போன்ற சீனாவின் பிற நகரங்களிலும் இது போன்ற கட்டடங்களை கட்டியமைக்க இந்த கட்டடக்கலைஞர் திட்டமிட்டுள்ளார்.

காற்றிலுள்ள மாசுபாடுகளை குறைப்பதற்கு கடினமாக திட்டமிட்டு வருவதாக 2014 ஆம் ஆண்டு சீன அரசு தெரிவித்தது. அதுமுதல், நிலக்கரி எரியாற்றலை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலைகளை மூடியும், சாலைகளில் ஓடும் வாகன எண்ணிக்கையை குறைத்தும் வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்