போதையுடன் நடந்து விபத்தில் சிக்கினால், மூச்சு சோதனை

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும்தான் மூச்சு சோதனை என்றால் இப்போது, குடித்துவிட்டு நடந்து போகும்போது விபத்தில் சிக்கினாலும் அந்த சோதனை நடக்குமாம் -- இது நமீபியாவில்.

நமீபியாவின் தலைநகரத்தில் பாதசாரிகள் சாலைவிபத்தில் மாட்டிக்கொண்டால், அவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை வி்டுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption மது அருந்திய பின் விந்ட்ஹோக் சாலையில் நடந்து விபத்தில் சிக்கினால், மூச்சு சோதனை

சாலை விபத்து நடந்தால் வாகன ஓட்டிகளை எப்படி போலிசார் சோதிப்பார்களோ அதே போல சோதனைகளுக்கு பாதசாரிகளும் உட்படுத்தப்படுவர் என்று விண்ட் ஹோக் நகர போலிசார் கூறுகிறார்கள்.

ஒரே விஷயம் - இந்த சோதனையை பாதசாரி உயிர் தப்பினால்தான் செய்ய முடியும் !

பாதசாரிகள் வார இறுதி நாட்களில் மது அருந்திவிட்டு நடந்து வரும்போதுதான் பொதுவாக இது நடக்கிறது என்கிறார் போலிஸ் அதிகாரி எட்மண்ட் கோசெப்.

``பெரும்பாலான சமயங்களில், மதுக் கடைகளிலிருந்து குடி போதையில் வருபவர்களால் சாலையில் முழுமையாக கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது`` என்று அவர் நமிபியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அதே சமயம் வாகன ஓட்டிகளும் மெதுவாகவோ அல்லது கூடுதல் கவனத்துடனோ ஓட்டலாம் என்று அவர் கூறினார்.

இதே போன்ற யோசனைகள் தென் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. தென் ஆஃப்ரிக்காவின் மேற்கு கேப் மாகாண அரசு, புதிய சட்டங்களை கொண்டுவரலாம் என்று கூறும் ஒரு பசுமை அறிக்கையை வெளியிட்டது.

குடித்துவிட்டு நடந்துவருபவர்கள் வீதிகளை ஆபத்தான வகையில் கடப்பது போன்ற அபாயகரமான நடத்தையை அடிக்கடி வெளிப்படுத்துகிறார்கள்``, என்ற அந்த அறிக்கை. ஆனால் அவர்கள் வெளிப்படையாக தோன்றும் வகையில் குடித்திருந்தால் தவிர அவர்களை பொதுவாக கைது செய்ய முடியாது என்று கூறியது.