பின்னணியில் யார் என்பது தெரியும்; வழக்குத் தொடர்வது குறித்தும் ஆலோசனை: சசிகலா

தான் உயிரை விட்டுவிடப் போவதாக தமிழக ஆளுருக்கு எழுதியது போன்ற ஒரு போலியான கடிதத்தை சமூக வலைதளங்களில் உலவவிட்டிருப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியிருக்கிறார். பெண்கள் அரசியலில் இருப்பது மிகக் கடினமான விஷயம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption சனிக்கிழமையன்று கூவத்தூரில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன்

தனக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்கு, சசிகலா இன்று பிற்பகலில் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் இறந்தபோதும் இதே போன்ற சூழல் ஏற்பட்டதாகவும் அதிலிருந்து கட்சியையும் ஆட்சியையும் ஜெயலலிதா மீட்டெடுத்ததாகவும் கூறினார்.

ஜெயலலிதா கட்சியை நடத்தும்போது அருகில் இருந்து தான் கவனித்திருப்பதாகவும் தங்களுக்கு இந்த சலசலப்பு புதிதல்ல என்றும் அ.தி.மு.கவை உடைக்க எப்போதும் முயற்சிகள் நடந்துவந்ததாகவும் அதிலிருந்தெல்லாம் ஜெயலலிதா கட்சியைக் காப்பாற்றியதாகவும் சசிகலா குறிப்பிட்டார்.

தான் உயிரைவிடப் போவதாக ஆளுநருக்கு எழுதியதைப் போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய சசிகலா, ஒரு பெண் அரசியலில் இருப்பது மிகக் கடினமான விஷயம் என்றும் கூறினார்.

இந்த சோதனைகள் தங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று என்றும் இதிலிருந்து தாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

பின்னணியில் யார்?

நாளை புதிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என நேற்று சனிக்கிழமை சசிகலா அறிவித்த நிலையில் அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "நாங்கள்

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption `என் பக்கம் எம்.எல்.ஏ.க்கள்'

ஜனநாயகத்தீன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இறுதியாக, தமிழகத்தில் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தங்களது தலைமையிலான அ.தி.மு.கவின் ஆட்சித்தான் நடைபெறும் என்று கூறினார் சசிகலா.

ஆளுநர் காலதாமதம் செய்வதற்குப் பின்னணியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணிக்குச் செல்வதன் பின்னணியிலும் யார் இருக்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். போகப்போக உங்களுக்கே எல்லாம் தெரியவரும் என்றும் சசிகலா கூறினார்.

சசிகலா ஆளுநருக்கு எழுதியதாக ஒரு கடிதம் ஒன்று இன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அந்தக் கடிதத்தில் தன்னை முதலமைச்சர் ஆக்காமல் காலதாமதம் செய்வதால் எம்எல்ஏக்கள் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் செல்வதாகவும் இனிமேல் காலதாமதம் செய்தால், தான் தற்கொலைசெய்துகொள்ளப் போவதாகவும் அதில் சசிகலா கூறியிருப்பதைப் போல அந்தக் கடிதம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தைத்தான் சசிகலா இன்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்பிருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, அதுபற்றி தாங்கள் ஆலோசித்து வருவதாக சசிகலா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்