82 நொடிகளில் நடந்து முடிந்த லண்டன் தாக்குதல்; `தனியாக செயல்பட்டார் காலித் மசூத்`

  • 26 மார்ச் 2017

லண்டனில் தாக்குதல் நடத்திய காலித் மசூத், தனியாகத்தான் செயல்பட்டிருப்பதாகவும், லண்டன் நகரில் மேலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் தாக்குதல்தாரி இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்

படத்தின் காப்புரிமை METROPOLITAN POLICE
Image caption காலித் மசூத்

இதுகுறித்துப் பேசிய மெட்ரோபாலிடன் போலீஸ் உதவி துணை ஆணையர் நீல் பாசு, "அவர் ஏன் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார் என்பதை நாம் எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு?

நாடாளுமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தும் முன்பு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் பொதுமக்கள் மீது காரை மோதினார் காலித் மசூத். இந்த சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள், 50 பேர் காயமடைந்தனர்.

Image caption காலித் மசூத்

கத்திக்குத்து காயத்தால் போலீஸ் அதிகாரி பால்மர் துடித்துக் கொண்டிருந்தபோது அவரைக் காப்பாற்ற முயன்றவர்களில் ஒருவரான எம்.பி. தோபியஸ் எல்வூட், தனது முயற்சி வெற்றி பெறவில்லை என்று தெரிந்ததும் அவர் மனமுடைந்து போனார் என்று தெரிவித்தார்.

திருமண விருப்பத்தைச் சொல்லுமுன் காதலியை மோதித் தள்ளிய கார்

அதே நேரத்தில், அவரைக் காப்பாற்ற முயற்சித்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். தனது வீரத்துக்காக அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார் என்றும், அன்பு காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை .
Image caption பள்ளியில், ஆட்ரியன் அஜோ என்ற பெயரில் இருக்கும்போது...மசூத்

இந்தத் தாக்குதல் சம்பவம் 82 நொடிகளில் முடிந்துவிட்டதாக உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

"மசூத் தனியாக செயல்பட்டதாக நம்பப்பட்டாலும், தீவிரவாத பிரசாரங்களால் ஈர்க்கப்பட்டு செயல்பட்டாரா அல்லது அவரை யாராவது ஊக்குவித்தார்களா, ஆதரித்தார்களா, உத்தரவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்," என்றார் நீல் பாசு.

படத்தின் காப்புரிமை AP
Image caption தாக்குதலில் ஈடுபட்ட இடத்தில் மசூத்துக்கு சிகிச்சை

யாராவது பின்னணியில் இருந்திருந்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மசூத்தைப் பற்றி அறிந்தவர்கள், காவல் துறையிடம் பேச வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தாக்குதல் நடந்த அடுத்த நாள் காலை, பர்மிங்ஹாமில் கைது செய்யப்பட்ட 58 வயது நபர், தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மான்செஸ்டரில் கைது செய்யப்பட்ட 32 வயதுப் பெண், போலீஸ் பிணையில் உள்ளதாக மெட்ரோபாலிடன் போலீசார் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்