`தீவிரவாதிகள் ஒளிந்துகொள்ளும் இடமாக வாட்ஸ்ஆப் இருக்கக் கூடாது’

"பயங்கரவாதிகள் ஒளிந்துகொள்ள எந்த இடமும் இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ள பிரிட்டன் உள்துறைச் செயலர் ஆம்பர் ரட், தீவிரவாதத் தாக்குதல் நேரங்களில், மற்ற யாரும் இடைமறிக்க முடியாமல் ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு அலைபேசியில் அனுப்பப்படும் தகவல்கள் குறித்த விவரங்களை உளவுத்துறை அமைப்புக்கள் பெற வழி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டன் உள்துறைச் செயலர் ஆம்பர் ரட்

இந்த வாரம் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டரில் காலித் மசூத் என்பவர் நான்கு பேரை கொன்றார். அவரின் அலைபேசி, சம்பவத்திற்கு இரண்டு நிமிடங்கள் முன்பு வரை, வாட்ஸ்-ஆப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

தொழிட்நுட்ப நிறுவனங்களை சந்தித்து தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கோரப் போவதாக ஆம்பர் ரட் தெரிவித்தார்.

தொழிற்கட்சி தலைவர் ஜெரிமி கோபின், அதிகாரிகளுக்கு ஏற்கெனவே "ஏராளமான அதிகாரங்கள்" இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் "தெரிந்து கொள்வதற்கான உரிமை" மற்றும் "தனிச்சுதந்திரம்" ஆகிய இரண்டுக்கும் இடையே சம அளவை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

"இதை நிச்சயமாக ஏற்கொள்ள முடியாது", பயங்கரவாதிகள் மறைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடாது என பிபிசியிடம் ரட் தெரிவித்தார்.

"மேலும் வாட்ஸ்-ஆப் மற்றும் அதைப் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் பயங்கரவாதிகள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும், ஒளிந்துகொள்ளவும் இடமளிக்காது என்பதை உறுதிபடுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

82 நொடிகளில் நடந்து முடிந்த லண்டன் தாக்குதல்; `தனியாக செயல்பட்டார் காலித் மசூத்`

"ஒரு காலத்தில் மக்கள் கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் சட்டரீதியான அனுமதியுடன் பிறருடன் தொடர்பு கொண்டனர்".

"ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் தகவல்களை குறியீடுகளாக கடத்தும் வாட்ஸ்-ஆப் போன்ற சேவைகளில் அனுப்பபடும் தகவல்களை

அறிந்து கொள்ளும் திறன் உளவுத் துறையினருக்கு உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

வாட்ஸ்-ஆப்பின் செய்திகள், அனுப்புநரின் தகவல்கள், குறியீடுகளாக மாற்றப்பட்டு அது பெறுநரை சேரும் போது மீண்டும் தகவல்களாக மாறுகிறது.

எனவே அச்செய்திகளை இடையில் யாராலும் ஊடுருவ முடியாது; சட்ட அமலாக்கம் மற்றும் வாட்ஸ்-ஆப் நிறுவனம் ஆகியவற்றால் கூட அதை ஊடுருவ முடியாது.

முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-ஆப் வசதியை பில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர்; மேலும் தனிநபர் தொடர்பு செய்திகளை பாதுகாப்பது தங்களது "அடிப்படை நம்பிக்கையைச் சார்ந்தது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் குறித்த கைதுகள் தொடர்கின்றன

இம்மாதிரியான தகவல் கடத்தலை பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், தகவல்களை ஊடுருவும் வசதியை அமைக்குமாறு அரசு வற்புறுத்துவது "தவறானது" என தெரிவித்துள்ளார் ரட்.

ஆனால் ஆப்பிள் ஐ ஃபோன்களில் உள்ள வாட்ஸ்ஆப் தகவல்களை, தேவைப்படும் நேரங்களில் எந்த வகையில் தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து தங்களுக்கு உதவுமாறு டிம் குக்கிடம் கோரப் போவதாக ரட் தெரிவித்துள்ளார்

லண்டன் தாக்குதல்தாரியாக கருதப்படும் 52 வயது காலித் மசூத் வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்தில் பாதசாரிகள் மீது காரை ஓட்டிச் சென்று மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.

காலித் மசூத் சுடப்படுவதற்கு முன், நாடாளுமன்ற வளாகத்தில் போலிஸ் அதிகாரி ஒருவரை குத்திக் கொன்றார். இவை அனைத்தும் 82 நொடிகளில் நடந்து முடிந்துவிட்டன.

பாதுகாப்புச் செயலர் சர் மிஷேல் ஃபலூனின் பாதுகாவலர் தான் காலித்தை சுட்டதாக கூறப்படும் நிலையில், அவரை யார் சுட்டனர் என்பதை ரட் உறுதிப்படுத்தவில்லை.

`லண்டன் தாக்குதல்தாரி இஸ்லாம் மதத்துக்கு மாறி பெயரை மாற்றியவர்'

சமூக ஊடக நிறுவங்கள் "தொழில்நுட்ப தீர்வுகளை" உருவாக்க வேண்டும் என்று ரட் கேட்டுக் கொண்டார்

"ஒவ்வொரு தாக்குதலும், வன்முறைகளை தூண்டுவதிலும், அனைத்து விதமான தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதிலும் இணையதளம் ஆற்றும் பங்கை உறுதிப்படுத்துகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

"சமூக ஊடக நிறுவனங்களான கூகுள், டிவிட்டர், மற்றும் முகநூல் ஆகியவை தங்களுக்கு உதவ வேண்டும்." என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"மேலும் சிறிய நிறுவனங்களான டெலிகிராம், வேட்பிரஸ் மற்றும் ஜஸ்ட் பேஸ்ட் ஆகிய சிறு நிறுவனங்களும் உதவ வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்ஸனும், தீவிரவாதக் கருத்துக்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிய வேண்டும் என இணையதள நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"துப்புக் கொடுக்கும்போது அவர்கள் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதால், தீய சக்திகள் வளர்கின்றன. இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது," என்று போரிஸ் ஜான்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்