ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடக்கவில்லை: ஆங் சான் சூ சி மறுப்பு

  • 6 ஏப்ரல் 2017
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
‘அரசுக்கு உதவுவதாகக்கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்கிறார்கள்’

மியான்மரில் சிறுபான்மை இனத்தவரான ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் மீது மனித உரிமை மீறல் நடந்ததாக செய்திகள் பரவலாக வந்துள்ள போதிலும், ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக இன அழிப்பு நடந்ததாக கூறப்படுவதை மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூ சி மறுத்துள்ளார்.

பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பெரும்பான்மையான ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் வாழும் ரக்கீன் மாநிலத்தில் பிரச்சனைகள் நிலவுவதை நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ சி ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், இன அழிப்பு என்ற வார்த்தை பயன்பாடு மிகவும் கடுமையானது என்று ஆங் சான் சூ சி மேலும் தெரிவித்தார்.

Image caption 'ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக இன அழிப்பு நடக்கவில்லை'

அதே வேளையில், நாடு திரும்பும் ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினரை திறந்த மனதுடன் ஆரத்தழுவி மியான்மர் வரவேற்கும் என்றுஆங் சான் சூ சி தெரிவித்தார்.

பிபிசியின் சிறப்பு செய்தியாளர் ஃபெர்கல் கீனிடம் உரையாடிய ஆங் சான் சூ சி , ''இன அழிப்பு எதுவும் நடந்ததாக நான் கருதவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல், இன அழிப்பு என்ற வார்த்தை பிரயோகம் கடுமையானது என்றே நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்.

ரொஹிஞ்சா பிரச்சனை - உண்மைகள், பொய்கள் மற்றும் ஆங் சான் சூ சி குறித்த பிம்பம்

மேலும், சூ சி பேசுகையில், ''ரக்கீன் மாநிலத்தில் மிகுதியான விரோத மனப்பான்மை நிலவி வருகிறது என்று எண்ணுகிறேன். அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாக தெரிந்ததால், முஸ்லிம்களே, முஸ்லிம்களை கொன்றனர்'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மரில் ரொஹிஞ்சா பிரிவினருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக புலப்பெயர்ந்த குடியேறிகளாக அவர்கள் மியான்மரில் பார்க்கப்படுகின்றனர். மியான்மரில் ரொஹிஞ்சா பிரிவினர் அடிக்கடி அரசு மற்றும் பொது மக்கள் ரீதியான பாரபட்சங்களை சந்தித்து வருகின்றனர்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் நடந்த இன ரீதியான வன்முறையால் இடம் பெயர்ந்த பல ஆயிரக்கணக்கான ரொஹிஞ்சா மக்கள் தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரொஹிஞ்சா பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பர்மிய ராணுவம்

அண்மைய மாதங்களில், ரக்கீன் மாநிலத்தில் அரசு எடுத்து வரும் ராணுவ நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 70,000 பேர் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றனர். ஒரு தாக்குதலில் 9 போலீசார் இறந்ததையொட்டி, மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்தது.

இந்த ராணுவ நடவடிக்கையில், ரொஹிஞ்சா பிரிவினர் மீது பாரபட்சமான அணுகுமுறையுடன் ராணுவம் பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் சித்ரவதை ஆகிய குற்றங்களை இழைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தான் ஒரு விசாரணை நடத்தப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு கடந்த மாதத்தில் அறிவித்தது.

ரொஹிஞ்சா முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்: விசாரணை அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

இக்குற்றச்சாட்டுகளை மியான்மர் அரசு ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வங்கதேசத்தில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் தன் கண்ணீரை துடைக்கும் சிறுமி

ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காத ஆங் சான் சூ சியின் மெளனம் மனித உரிமைகளின் பாதுகாவலர் என்ற அவரது பெருமையை சேதப்படுத்துவதாகவே பலரும் கருதுகின்றனர்.

ரங்கூனில் ராணுவத்தால் பல தசாப்தங்கள் கட்டாய வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட சூ சி, 1990-களில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக அறியப்பட்டு பிரபலமானவர் ஆவார்.

ஆனால், இந்த விஷயத்தில் அவர் கடுமையான சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில், முதல் முறையாக நேர்முக பேட்டியளித்துள்ள ஆங் சான் சூ சி, தன்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தான் ஏற்கனவே பதிலளித்துள்ளதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ரொஹிஞ்சா பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்துக்கு எதிராக மியான்மரில் போராட்டம்

இது குறித்து அவர் கூறுகையில், ''ரக்கீன் மாநிலத்தில் சென்ற முறை கலவரங்கள் வெடித்த போது, கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

'அதே கேள்விகள் தான் மீண்டும் கேட்கப்படுகிறது'

''பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் விடையளித்தாலும், அவர்கள் நான் எதுவுமே பேசவில்லை என்று கூறுகின்றனர். சிலர் நான் ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று விரும்புவதாலும், ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பிரிவை கண்டிக்க வேண்டும் என்று விரும்பினால், நான் அவ்வாறு செய்ய முடியாது'' என்று சூ சி குறிப்பிட்டார்.

தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு ராணுவத்திடம் லகான் உள்ளது என்று கூறப்படுவதை சூ சி மறுத்தார்.

படத்தின் காப்புரிமை EPA

''பாலியல் வல்லுறவு, அழிவு மற்றும் சித்ரவதை என்று அனைத்தையும் நடத்த ராணுவத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டின் எப்பகுதிக்கும் சென்று போராட, நாட்டை காக்க ராணுவத்துக்கு அதிகாரமுள்ளது. இது அரசியல் அமைப்பில் உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அம்சங்கள் மற்றும் அதிகாரங்கள் ராணுவத்தின் வசமுள்ளது'' என்று சூ சி தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆங் சான் சூ சியை சந்தித்தது குறித்து பிபிசி செய்தியாளர்

''ராணுவ ஆட்சியின் மீதான அபத்தம் மற்றும் நம்பிக்கையின்மையின் மிச்ச அடையாளமாக திகழும் நே யி டாவில் நான் அவரை சந்தித்தேன்'' என்று குறிப்பிட்ட பிபிசி செய்தியாளர் ஃ பெர்கல் கீன் குறிப்பிடுகையில், '' ராணுவ தளபதிகளை, உயர் அதிகாரிகளை பாதுகாப்பாக வைத்திருக்க மக்களிடம் இருந்து தொலைவாக உருவாக்கப்பட்ட இடம் இது'' என்று தெரிவித்தார்.

Image caption வங்கதேசத்தில் ஏராளமான ரொஹிஞ்சா முஸ்லீம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்

கட்டாய வீட்டுச் சிறையில் இருந்து கடந்த 1995 ஜுலையில் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நான் அவரை முதல் முறையாக சந்தித்து பேட்டி எடுத்தேன் என்று குறிப்பிட்ட பிபிசி செய்தியாளர் மேலும் கூறுகையில் , ''நான் அவரை தற்போது சந்தித்த சூழல் மிகவும் நட்புடன் கூடிய சந்திப்பாக இருந்தது. தனது அரசின் சாதனைகளை விவாதித்த ஆங் சான் சூ சி, ரக்கீன் மாநிலத்தில் இன அழிப்பால் ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுவதை முழுவதுமாக மறுத்தார்'' என்று தன் சந்திப்பு குறித்து எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு தனது அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆதரித்து ஆங் சான் சூ சி கருத்து வெளியிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters

மியான்மரில் நடந்த மோதல்களால், அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்ற ரொஹிஞ்சா மக்கள் குறித்து ஆங் சான் சூ சி கூறுகையில், ''மியான்மருக்கு திரும்பி வந்தால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சிலர் அவ்வாறு திரும்பியுள்ளனர். மியான்மருக்கு திரும்புவது அவர்களின் விருப்பம்'' என்று தெரிவித்தார்.

''அவர்களை நாடு திரும்புமாறு வரவேற்கிறோம்'' என்று தெரிவித்தார் ஆங் சான் சூ சி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்