சிரியாவை தாக்கியதால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்?

லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பழிவாங்கிய சிரியாவின் உள்நாட்டுப் போர், இன்னும் எண்ணிக்கையில்லாமல் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. இதற்கு உள்நாட்டின் அதிகார வேட்கையா காரணமா அல்லது உலக நாடுகள் கொம்பு சீவிவிட்டு நடத்தும் நாடகமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதுபற்றிய ஓர் ஆய்வு.

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியா அதிபர் பஷர் அல்-அஸத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் தொடங்கப்பட்ட கிளர்ச்சி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த போர்க்கணலில் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

உள்நட்டுப் போரினால், சிரியா முற்றிலுமாக சீரழிந்துவிட்டது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளும் இதில் இறங்கி சிக்கலை அதிகப்படுத்திவிட்டன.

உள்நாட்டு போர் தொடங்குவதற்கு முன்பு, சிரியாவின் மக்கள், வேலையின்மை, ஊழல், அரசியல் சுதந்திரமின்மை என்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதிபர் பஷர் அல்-அஸத்தின் அடக்குமுறை போக்கும் மக்களுக்கு எரிச்சலூட்டியது.

2000 ஆவது ஆண்டில், தனது தந்தை ஹாஃபேஜ் அல்-அஸதிடம் இருந்து பஷர் அல்-அஸத் பதவியை பெற்றார். இந்த ஆட்சி மாற்றத்துக்கு எதிராக பல அரபு நாடுகளில் கிளர்ச்சி தொடங்கி, அது பரவலாகி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவின் தெற்கு நகரான தாராவாவில் ஜனநாயகத்திற்கு ஆதரவான இயக்கமாக மாறியது.

ஆனால் இந்த எதிர்ப்பை அடக்க நினைத்த அதிபர் அஸத் போராட்டத்தை நசுக்க, இரக்கமற்ற முறைகளைக் கையாண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியாவில் போரில் பாதிக்கப்பட்ட குழந்தை

அரசின் பலப்பிரயோகத்திற்கு எதிராக நாடு தழுவிய முறையில் போராட்டம் வெடித்தது. அதிபர் பஷர் அல்-அஸத் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் வலுப்பெற்றது.

போராட்டங்கள் நாளடைவில் தீவிரமடைந்து, கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்தினார்கள். முதலில் தற்காப்புக்காக ஆயுதத்தை கையில் ஏந்திய அவர்கள், பிறகு தங்கள் பகுதியில் இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக ஆயுதங்களை பிரயோகித்தனர்.

சிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: ஐ.நா.

"வெளிநாட்டில் இருந்து தூண்டிவிடும் பயங்கரவாதம்" என்று மக்களின் கிளர்ச்சியை விமர்சித்த அஸத், அதை நசுக்க சபதம் எடுத்தார். நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அதிபர் தீவிரப்படுத்த, மறுபுறம் போராளிகளின் கோபமும், வேகமும் சூடுபிடித்தது.

ஒன்றிணைந்த கிளர்ச்சிக் குழுக்கள்

2012 ஆம் ஆண்டில் கிளர்ச்சியாக இருந்த போராட்டம், உள்நாட்டு போராக உருமாறிவிட்டது. சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, நாடு முழுவதும் இருந்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சிக் குழுக்கள் ஒரே குழுவாக இணைந்து செயல்பட முடிவெடுத்தன.

எனவே, பலமுனைகளாக பிரிந்திருந்த கிளர்ச்சிக் குழுக்கள் ஒன்றிணைந்து பலம் பெற்றன. எனவே இருமுனையாக மாறிய யுத்தத்தில் அஸத் அரசு பலமான எதிரணியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது.

சிரியாவின் உள்நாட்டுப் போரில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் உள்நுழைந்தன. இரான், ரஷ்யா, செளதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

அஸத் அரசுக்கு சில நாடுகளும், எதிரணிக்கு சில நாடுகளும் உதவி புரிய களம் இறங்க, இருதரப்புக்கும், நிதி, ராணுவம் மற்றும் அரசியல்ரீதியாக உதவிகள் கிடைக்கத் தொடங்கியன.

பல நாடுகளின் தலையீட்டால், சிரியாவின் நிலைமை மேலும் மோசமானது. பிற நாடுகள் தங்கள் போர்த் திறனை சோதித்துப் பார்க்கும் சோதனைக்களமாக சிரியா மாறிவிட்டது.

வெளிநாடுகள், சிரியாவில் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அஸத் குற்றம் சாடினார். சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சிரியாவில், அதிபர் பஷர் அல்-அஸத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். இந்த முரண்பாடு, ஷியா மற்றும் சுன்னி பிரிவினருக்கான உள்நாட்டுப் போராக மையம் கொண்ட்து. இந்தப் பிளவினால் பரஸ்பர துன்புறுத்தல்கள் அதிகரித்தன.

ஷியா - சுன்னி இடையே ஏற்பட்ட பிரிவினையால் கிளர்ச்சிக் குழுக்கள் அங்கே உட்புகுந்தன.

சிரியா: `ரசாயன' தாக்குதலில் 58 பேர் பலி

கிளர்ச்சிக் குழுக்களின் வருகையினால், போர்க்கள நிலைமை முழுமையாக மாறிவிட்டது. ஹயாத் தாஹிர் அல்-ஷம், அல் கய்தாவுடன் இணைந்து அல்-நுஸ்ரா முன்னணியாக கூட்டணி அமைத்தது. தொடர்ந்து, சிரியாவின் வடமேற்கு மாநிலமான இட்லிப்பை இந்தக் கூட்டணி கைப்பற்றியது.

ஐ.எஸ் தோன்றிய விதம்

மற்றொருபுறம், இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதக்குழு, சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய அளவிலான இடத்தை கைப்பற்றியது. அரசு படை, கிளர்ச்சிக் குழுக்கள், குர்து இன கிளர்ச்சியாளர்கள், ரஷ்யா வான்படையின் உதவியுடன், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்படைகளுடன், ஐ.எஸ் குழு சண்டையைத் தொடங்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போரில் பாதிக்கப்பட்ட சிரியா

இரான், லெபனான், இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் இருந்து ஷியா பிரிவைச் சேர்ந்த அயிரக்கணக்கானோர் சண்டையிடுவதற்காக சிரியாவுக்குள் நுழைந்தனர். நிலைமை மேலும் கடுமையாக, சிரியாவில் இருப்பதே பஷர் அல்-அஸதுக்கு கடினமானது. தன்னுடைய இருப்பை தக்க வைப்பதற்காக, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அஸத், தனது எதிரிகளின் வசம் இருந்த பகுதிகளில் வான் தாக்குதலை தொடங்கினார்.

ரஷ்யாவின் உறவு

ரஷ்யா அஸதுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்தது.

வான் தாக்குதலில் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைப்பதாக ரஷ்யா கூறினாலும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற எதிரணிக்கு எதிராகவே வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விமானம் விழுவதற்கு முன்னர் வெளியேறிய சிரியா ராணுவ விமானிக்கு சிகிச்சை

ஆறு மாதங்களுக்கு பிறகு, சிரியாவில் இருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.

சிரியாவில் தங்கள் பணி முடிவடைந்துவிட்டது என்று கூறிய புதின், ரஷ்யாவின் உதவியால்தான் அஸத் அரசு அலெப்போவை மீண்டும் கைப்பற்ற முடிந்த்தாகவும் தெரிவித்தார்.

ஆனால், அந்தப் பகுதி 2016 ஆம் ஆண்டில் மீண்டும் எதிரணியினரின் வசமாகியது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இரான், அஸதின் அரசை காப்பாற்றுவதற்காக, பெரும்தொகையை செலவளிப்பதாக கூறப்படுகிறது.

இரான், படை உதவியைத் தவிர வேறு பலவிதங்களிலும் பஷர் அல்-அஸதுக்கு ஆதரவு கொடுக்கிறது என்றும், நூற்றுக்கணக்கான படைவீரர்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள்

சிரியாவின் அழிவிற்கும், சிக்கலுக்கும் அசத்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

2014 முதல் அமெரிக்கா, சிரியாவில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சன்னி பிரிவினர் அதிகமாக இருக்கும் செளதி அரேபியா, இரானுக்கு எதிராக சிரியாவில் அரசின் எதிர் தரப்பினருக்கு உதவி செய்த்து. அஸதுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கிடைக்கும் உதவிகளில் செளதி அரேபியாவின் பங்கு முக்கியமானது.

அசத்துக்கு எதிராக அமெரிக்கா

அஸதுக்கு எதிராக, ஐ.எஸ் அமைப்புக்கு செளதி அரேபியாவும், துருக்கியும் உதவி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்தாண்டுகளில் சிரியாவில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக கூட்டணிப் படைகள் கூறுகின்றன.

இருந்தபோதிலும், 2015 ஆகஸ்டுக்கு பிறகு சிரியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதை ஐ.நா நிறுத்திவிட்டது. மூன்று லட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் சிரியாவில் உயிரிழந்திருக்கலாம் என்று பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் நான்கு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என சிந்தனையாளர் குழு ஒன்று அனுமானிக்கிறது.

குழந்தைகள், பெண்கள் உட்பட 50 லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டனர். சிரியாவில் நிலவும் போர்ச்சூழல், நாட்டிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்களை அகதிகளாக வெளியேற தூண்டுகிறது. இதன் தொடர்ச்சியாக, சிரியா அகதிகளை எதிர்கொள்ளும் பிரச்சனை, பிற நாடுகளுக்கும் அதிகரித்துவிட்டது.

சிரியாவில் எப்போது போர் ஓயும் என்பது தெரியாது. அங்குள்ள ஒவ்வொருவரும், போரில்லா சூழலையே விரும்புவார்கள். ஆனால் தற்போது, அமெரிக்கா மீண்டும் சிரியாவின் மீது வான் தாக்குதல்களை தொடுத்திருப்பதால், சிரியாவை விட்டு போர் மேகங்கள் அகலும் சூழல் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்