குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை

உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை இறுதி முடிவெடுக்கும் வரை தூக்கிலிடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை

குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிடுவதைத் தடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு செய்திருந்த வேளையில், இவ்வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோனி ஆபிரஹாம் இன்று வழங்கிய தீர்ப்பில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் வியன்னா ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் வாதங்களை ஏற்றுக் கொண்ட ரோனி ஆபிரஹாம் மேலும் கூறுகையில், ''ஜாதவை தூக்கிலிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை குல்புஷன் ஜாதவை தூக்கிலிடக்கூடாது '' என்று தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் ரோனி ஆபிரஹாம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குல்புஷன் ஜாதவை தூதரகம் மூலம் தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் குல்புஷன் ஜாதவை சந்திக்க, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் ராஜரீக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது;

ஆனால், தாங்கள் சட்டரீதியான நடைமுறைகளை சரியாக கடைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்த பிற செய்திகள்:

பாகிஸ்தானில் இந்திய `உளவாளி` விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பாகிஸ்தானில் "இந்திய உளவாளி" கைது; இந்திய அரசு மறுப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்