பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டோர் மீதான தேசதுரோக குற்றச்சாட்டு கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்இறுதியாட்டத்தின் போது, ''இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும்'' கோஷமிட்ட 15 முஸ்லிம்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட தேசதுரோக குற்றச்சாட்டுக்களை மத்தியப்பிரதேச போலீசார் கைவிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியபிரதேச போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசதுரோக குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது மிகவும் சிரமமானது என்று தெரிவித்தனர்.

ஆனால், தேசதுரோக குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக மத நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், பாகிஸ்தான், இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றவுடன், இந்த முஸ்லிம் நபர்கள் பட்டாசு வெடித்ததாக அருகாமை வீடுகளில் இருந்து இந்துக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆர். ஆர். பரிஹார் கூறுகையில், இவர்கள் மீதான சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு இன்னமும் எஞ்சியுள்ளது என்று தெரிவித்தார்.

''தேசதுரோக குற்றச்சாட்டை நிரூபிப்பது மிகவும் சிரமமானது. மேலும், இவர்களில் யாரின் மீதும் குற்றப்பின்னணியில்லை'' என்று செய்தியாளர்களிடம் ஆர். ஆர். பரிஹார் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று காண்ட்வா நகர சிறைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுப்பப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை AFP

இதனிடையே, இந்தக் கைது நடவடிக்கைகள் அபத்தமானவை என்று வெளிப்படையாக வர்ணித்துள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

தேசதுரோக குற்றச்சாட்டு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

'ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்'

இந்த நபர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் அல்ல என்றும், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதுதான் காரணம் என்று போலீசார் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்திவலைத்தளம் மேற்கோள்காட்டியுள்ளது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

''பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பட்டாசு வெடித்தார்கள் என்று தெரியவில்லை. என் மகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை'' என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தந்தையான குல்ஜார் டாட்வி, பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தி, பிரச்சனையில் சிக்குவது முதல் முறையல்ல.

2014 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் 66 பேர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், அந்த மாநில மாணவர்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அங்கு அனுப்ப்ப்பட்டனர்.

தொடர்பான செய்திகள்:

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது

இந்திய அணியின் படுதோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்

இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்