இணைய சமநிலைக்கு எதிரான டிரம்ப்பின் முயற்சிகளை எதிர்க்கும் இணைய தளங்கள்

போராட்ட நாளை முன்னிட்டு யூ டியூப் பயனாளிகள் போரட்ட வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்க தொடங்கிவிட்டார்கள். படத்தின் காப்புரிமை Tyklay
Image caption போராட்ட நாளை முன்னிட்டு யூ டியூப் பயனாளிகள் போரட்ட வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்க தொடங்கிவிட்டார்கள்.

இணைய சமநிலையை நிர்வகிக்கும் அமெரிக்க விதிகளில் செய்யப்பட உள்ள மாற்றங்களை எதிர்த்து ஜூலை 12-ஆம் தேதி (புதன்கிழமை) இணையத்தின் சில பிரபல இணையதளங்கள் நடவடிக்கையில் இறங்க உள்ளதால், அவை இந்த வாரம் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கக் கூடும்.

சிவில் சுதந்திரக் குழுக்கள் இணைந்து நடத்தக்கூடிய இந்த போராட்டத்தில் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களும் இணைகின்றன.

மேலும் டிவிட்டர், ரெட்டிட் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்திகள் ஏற்கனவே செயற்பாட்டாளர்களால் பெருமளவில் வைரலாக பகிரப்பட்டுள்ளன.

ஏன் இந்த கண்டனங்கள்? இந்த சமூக வலைத்தள பிரச்சாரங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்?

இணைய சமநிலை என்றால் என்ன?

ஒரு இணைய சேவை நிறுவனம், சட்டப்பூர்வமான அனைத்து உள்ளடக்கத்தையும், அது எங்கிருந்து வருகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தனது வாடிக்கையாளர்களுக்கு சரிசமமாக அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இணைய சமநிலை என்ற கொள்கையாகும்.

வேறு விதத்தில் சொன்னால், இணையத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய வலையமைப்பு ஒரு நெடுஞ்சாலை என்றால், இணைய சமநிலையின் கீழ், கார்கள் வேகமாக செல்லக்கூடிய பாதை மற்றும் லாரிகள் மெதுவாக செல்லக் கூடிய பாதை என வெவ்வேறு பாதைகள் இருக்கக் கூடாது. வேகமாக செல்லக் கூடிய பாதையை பயன்படுத்த வாகன ஓட்டிகள் பணம் செலுத்தக் கூடாது. எல்லாத் தரவுகளும் ( டேட்டா) அதன் அளவு எப்படியிருந்தாலும், சமமான முறையில் விநியோக்கப்படவேண்டும்.

நடைமுறையில் இதன் அர்த்தம் என்னவென்றால், அமெரிக்காவில் உள்ள காம்கேஸ்ட் அல்லது வையாகாம் போன்ற இணைய சேவை நிறுவனங்கள்,குறிப்பிட்ட இணையதளங்களின் உள்ளடக்கத்தை தடை செய்யவோ, அந்த இணையதளங்களின் டேட்டாக்களின் வேகத்தை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ கூடாது. மேலும் அவை தங்கள் போட்டியாளர்களை மிஞ்ச வேண்டும் என்பதற்காக, தங்களுடைய சொந்த உள்ளடக்கத்திற்கு தனி கவனம் அளிக்கும் சூழல் இருக்கக் கூடாது.

படத்தின் காப்புரிமை Meme generator
Image caption போராட்ட நாளை முன்னிட்டு இதைப் போன்ற பல மீம்கள் இணையத்தில் பெருமளவில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இணைய சமநிலை ஆதரவாளர்கள் இது நேர்மை குறித்தது என்கிறார்கள். அதாவது தணிக்கையை வரம்புக்குட்படுத்துவது மற்றும் மற்ற இணைய சேவை நிறுவனங்களின் வளர்ச்சியை , பெரிய இணைய சேவை நிறுவனங்கள் நேர்மையற்ற முறையில் தடுக்க முடியாததை உறுதி செய்வதாகும்.

ஆனால் இந்த செயல்பாடுகள் தேவையற்ற கட்டுப்பாடுகளை தொழிலில் புகுத்துகிறது மற்றும் இந்த கட்டுப்பாடுகள் புதிய தொழில்நுட்பங்களில் செய்யப்பட்டும் முதலீடுகளை நெறிக்கும் வகையில் இருப்பதாகவும், அந்த இணைய சமநிலை சட்டங்கள் காலத்துக்கு பொருத்தமானதாக இல்லாமல் போய்விட்டதாகவும் எதிர் தரப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது என்னதான் பிரச்சனை?

தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர் குழுக்கள் இணைந்து நடத்திய பெரிய அளவிலான பிரசாரங்களைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய இணைய சமநிலை விதிகளை ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தின் ஆதரவோடு அமெரிக்காவின் மத்திய தகவல் ஆணைக்குழு (FCC) இயற்றியது. இந்த விதியின்படி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சமமான வகையில் இணைய சேவை நிறுவனங்களும் கொண்டு வரப்பட்டன.

ஆனால் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் இந்த வரையறைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இணைய சமநிலைக்கு எதிரானவரும், முன்னாள் ஆணையாளருமான அஜித் பையை மத்திய தகவல் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தார்.

இணைய சேவை நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளிலிருந்து லாபம் அடைவதை இணைய சமநிலை விதிமுறைகள் தடுப்பதால், அந்த நிறுவனங்கள் குறைந்த வருமானம் உடையவர்கள் அல்லது கிராமப்புற குடும்பங்களுக்கு இணைய இணைப்பு வழங்கக் கூடிய சிக்கலான உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதில்லை என பை தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமெரிக்க மத்திய தகவல் ஆணைக்குழுவின் தலைவரான அஜித் பை, இணையச் சமநிலை விதிமுறைகளை விமர்சனம் செய்யக் கூடியவர்களில் முக்கியமானவர்.

வரும் மே மாதம் முதல் இணைய சமநிலை விதிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்க எப்.சி.சி தலைவர்கள் வாக்களித்துள்ளனர். மேலும் இது குறித்து பொது மக்கள் கருத்துகளையும் எப்.சி.சி கேட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை இந்த திட்டங்கள் குறித்த தங்கள் கருத்துகளை அமெரிக்கர்கள் பதிவு செய்யலாம்.

இது தொழில்நுட்ப உலகத்தின் நிகழ்வு மற்றும் ஒரு அரசியல் விவாதமாக இருந்தாலும், இந்த பிரச்சனை சிலிகான் பள்ளத்தாக்கு மற்றும் வாஷிடங்டனையும் தாண்டி சில முக்கிய பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகவும் வெளிப்படையாக பேசக்கூடிய நபர்களில் ஒருவராக அறியப்படும் பிரிட்டிஷ் நகைச்சுவையாளரும், `லாஸ்ட் வீக் டுநைட்` நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், இணைய சமநிலை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக கருவியாக செயல்பட்டவருமான ஜான் ஆலிவரின் எப்.சி.சி -யின் முடிவுக்கு எதிரான செயல்பாடுகள் , வாக்கெடுப்பு முடிவு வெளிவந்ததும் வைரலாக பரவியது.

ஆலிவரின் அழைப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள், எப்.சி.சி இணையதளத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் பலர் உட்புகுந்ததால், எப்.சி.சி இணையதளம் செயலிழந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தாக்குதல் இணைய ஊடுருவிகளால் நிகழ்த்தப்பட்டது என எப்.சி.சி பின்னர் தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை HBO / Youtube
Image caption இணையச் சமநிலைக்கான தனது போராட்டத்தை தொடரும் வகையில், ஜான் ஆலிவர் யூ டியூப் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று நடக்கப் போவது என்ன?

எப்.சி.சி -யின் இந்த முடிவுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

இன்று (ஜூலை 12), அமேசான் போன்ற 170 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த மாற்றத்திற்கான முன்மொழிவை எதிர்த்து தங்கள் சேவைகளின் வேகத்தை குறைத்து போராடுகின்றன.

இணைய சமநிலை அகற்றப்பட்டால், பிரபல இணையதளங்களுக்கு என்ன நிகழும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த போராட்டம் முயற்சிக்கப்படுகிறது.

இணைய சமநிலை ஆதரவு போராட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்திற்கு சென்று, பயனாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் மற்றும் பாப்-அப் விண்டோக்களை இந்த நிறுவனங்கள் காட்ட உள்ளன.

படத்தின் காப்புரிமை Battle for the Net
Image caption பிரபல இணையதளங்களான எட்சி,மோஸில்லா, வீமியோ மற்றும் கிக் ஸ்டார்டர் போன்றவற்றில் இது போன்ற அறிவிப்புகள் தோன்றும்.
படத்தின் காப்புரிமை Battle for the Net
Image caption எப்.சி.சி அமைப்பின் ஆலோசனையில் பங்கேற்க பயனாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் டிவிட்டர் மற்றும் ரெட்டிட் போன்ற இணையதளங்கள் இது போன்ற நகரும் படங்களை பகிர்ந்து வருகின்றன.

ஃபயர்பாக்ஸ் இணைய உலாவியை உருவாக்கிய மொசில்லா அறக்கட்டளையும் , இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ள நிறுவனங்களில் ஒன்றாகும்.

`நாங்கள் ஏற்கனவே அமெரிக்க மக்களிடம் இருந்து 40,000 கருத்துகளை பெற்றுள்ளோம்.` என மோசில்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆஷ்லி பாய்ட் கூறியுள்ளார்.

`இரு தரப்பிலும் தங்கள் பார்வையில் உறுதியாக இருக்கக் கூடிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் இருப்பதால், இந்த விவாதம் இறுகிய நிலைப்பாடுள்ள விவாதமாக பார்க்கப்படும் பிரச்சனை இருக்கிறது. ஆனால் இது உண்மையான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் காட்ட விரும்புகிறோம்.` என பிபிசி டிரெண்டிங்கிடம் பாய்ட் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Morzilla
Image caption மோஸில்லா அறக்கட்டளை உருவாக்கியுள்ள இணையச் சமநிலை போராட்ட நாள் குறித்த புகைப்படம்.

தங்கள் தரப்பில் களமிறங்கும் இணையதள சேவை நிறுவனங்கள்

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் இணைய சமநிலை ஆதரவாளர்கள் மட்டும் இன்று புதன்கிழமை போராட்டம் நடத்த திட்டமிடவில்லை. இணைய சேவை நிறுவனங்களும் தங்கள் தரப்பு நியாயங்களை விளக்க திட்டமிட்டு வருகின்றன.

தாங்கள் இணைய நடுநிலையின் பொதுவான விதிகளை ஆதரிப்பதாகவும், ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் எப்.சி.சி யின் பழைய விதிகளை எதிர்ப்பதாகவும் அமெரிக்காவின் மிகப்பெரிய கேபிள் சேவை நிறுவனமாக காம்கேஸ்ட் செய்திகளை பகிரத் துவங்கிவிட்டது.

படத்தின் காப்புரிமை Comcast
Image caption `நாங்கள் இணையச் சமநிலையை ஆதரிக்கிறோம். ஆனால் அதற்கான விதிகள், எங்கள் நிறுவனங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பட்டியலில் சேர்ப்பதை ஏற்க முடியாது.` என காம்கேஸ்ட் கூறுகிறது.

வலைத்தள பதிவு ஒன்றில், `தாங்கள் விரும்பக் கூடிய, எந்த சட்டப்பூர்வான உள்ளீடுகளையும் ,எந்த நேரத்திலும் நுகர்வோர்கள் பயன்படுத்துவதை இலவசமான, வெளிப்படையான இணைய வசதியை உறுதி செய்யும், சட்டப்பூர்வான இணையச் சமநிலையை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இனியும் தொடர்ந்து ஆதரிப்போம்.` என காம்கேஸ்ட் நிறுவன நிர்வாகி டேவிட் கோஹென் வலைத்தள பதிவு ஒன்றில் எழுதியுள்ளார்.

இணைய சமநிலையை பாதுகாக்கும் சட்டங்களை கொண்டு வர ஆதரவாக இருப்பதாகவும், ஆனால் தற்போதைய விதிமுறைகள், ஆண்டுக் கணக்கில் சட்டரீதியான மோதல்களுக்கும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளிலிருந்து டிரம்ப்பின் கொள்கைகளுக்கு ஏற்பட்ட மாறுதல் காரணமாக நிச்சயமற்ற நிலைக்கும் வழிவகுத்துவிட்டன என்றும் காம்கேஸ்ட் கூறியது.

எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக வரக்கூடியவர், மீண்டும் இந்த விதிகளை மாற்ற வாய்ப்பிருப்பதாக காம்கேஸ்ட் மற்றும் மற்ற இணையசேவை நிறுவனங்கள் கவலைப்படுகின்றன.

இணைய சமநிலையை விளக்குதல்

தொழில்நுட்பம் சாராத மக்களுக்கு குறிப்பாக இந்த விதிகள் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிந்திராத மிகச் சாதாரண இணையதள பயனாளர்களுக்கு இந்த விவாதம் குறித்த நுணுக்கங்களை விளக்க முயற்சிப்பது சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள இணைய சமநிலை ஆதரவாளர்களுக்கு பெரும் சவாலாகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களின் சமூக வலைத்தளமான ஸ்டேக் ஓவர்ஃப்லோ என்ற நிறுவனம், இந்த அறிவு இடைவெளியை நிரப்ப முயற்சி செய்து வருகிறது. இந்த தளம் கேள்வி, பதில் வடிவத்தை பின்பற்றுகிறது.

ஓஹியோவைச் சேர்ந்த எலியட் ப்ரவுன் போன்ற தரவு வரைவாளர்களும் ஸ்டால் ஓவர்ஃபுளோ தளத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கெடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Protect the Internet - Facebook
Image caption இணையச் சமநிலை போராட்டத்திற்கு ஆதரவான பதாகைகளை கையில் ஏந்தியுள்ள தாய் மற்றும் மகன்.

`நான் அரசியல் செயல்பாட்டாளர் அல்ல.ஒருவரின் வாக்கை கட்டுப்படுத்தவோ அல்லது வேறு ஒன்றாக மாற்றவோ நான் விரும்பவில்லை. ஆனால் சரியான தகவல்கள் அவர்களின் விரல் நுனிகளில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை நான் உணருகிறேன். `என அவர் பிபிசி டிரெண்டிங்கிடம் தெரிவித்தார்.

`இந்த விவாதம் குறித்து துறை சாராதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய எடுத்துக்காட்டுகளை எழுதி, அவற்றை என் நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன்``, என்றார் அவர்.

இணையச் சமநிலைக்கு மிக உறுதியாக ப்ரவுன் ஆதரவளிக்கிறார்.

ஒட்டுமொத்த இணைய சேவையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவில் நான்கு அல்லது ஐந்து பெரிய இணைய சேவை விநியோக நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கினால், அவர்களால் இணையத்தின் சில பகுதிகளில் தரவுகளை அணுகுவதை நெறித்துவிட முடியும். அவர்கள் வரலாற்றின் மீதே தாக்கம் செலுத்த முடியும் என்பது ஒரு சரியான கூற்று``, என்றார் அவர்.

இணைய சமநிலை ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், பெரிய எண்ணிக்கையிலான தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிகளை ஆதரிப்பதாக முடிவுக்கு வருவது எளிது.

படத்தின் காப்புரிமை Open Media
Image caption பீட்சா மூலம் விளக்கப்படும் இணையச் சமநிலை

ஆனால் தொழில்நுட்ப சமூகங்களிடையே சில வித்தியாசமான கண்ணோட்டங்கள் உள்ளன.

ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பணியாற்றி வரும் டெக்சாசை சேர்ந்த தரவு அமைப்பாளரான பென் காலின்ஸ் , எப்.சி.சி கொண்டு வரும் புதிய மாற்றங்கள், மற்றவர்கள் கணிக்கும் அளவுக்கு ,வெளிப்படையான இணைய சேவைக்கு இறுதி நாளாக இருக்காது என தான் நினைப்பதாக பிபிசி டிரெண்டிங்கிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

`அடிப்படையில் நாம் வேலை செய்வதற்கு வெளிப்படையான சந்தைகளை விரும்புகிறோம். இது நிகழ்வதற்கு எளிய வழி, கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதுதான்.` என அவர் தெரிவிக்கிறார்.` இணையத்தின் வரலாற்றில், இது வரும் வரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ``அடிப்படையில் சில விஷயங்கள் மாற்றப்பட்டதற்குக் காரணம் , விரைவான இணைய சேவைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்று சிலர் அஞ்சியதுதான்``, என்கிறார் அவர்.

இணைய சேவை நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க சந்தை அழுத்தங்கள் ஒரு நல்ல ஊக்கமாக அமையும் என காலின்ஸ் வாதிடுகிறார். மேலும் இந்த விதிகளுக்கு எதிரானவர்கள் இந்த வாரப் போராட்டத்தின் போது சற்று அடக்கியே வாசிப்பார்கள் ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே இந்த வாதத்தில் வென்றுவிட்டதாக நினைப்பதுதான்`` என்கிறார் அவர்.

`தங்கள் வாடிக்கையாளர்களை மோசமாக நடத்தக் கூடாது என்று காம்கேஸ்ட் மற்றும் மற்ற சேவை நிறுவனங்கள் மீது சந்தை அழுத்தங்கள் இருக்கின்றன. இணைய சமநிலைக்கு ஆதரவான பல வாதங்கள் , `எனக்கு என் வீட்டில் சிறந்த இணைய வசதி வேண்டும்` என்ற அளவுக்கு சுருக்கப்படுகின்றன. இதனை சந்தைகள் அளிக்கும். ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும்`, என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள்

இலங்கை: கடலில் அடித்து செல்லப்பட்ட யானையை காப்பாற்றிய கடற்படை

கொடைக்கானலில் திருமணம் செய்கிறார் இரோம் ஷர்மிளா

இலங்கை: முப்படைகளிலிருந்து விலகியோடிய 4000க்கும் மேற்பட்டோர் கைது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :