துரத்தும் ஊழல் விசாரணை: நவாஸ் ஷெரீப் எதிர்காலம் கேள்விக்குறி

ஊழல் வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் குடும்பத்திற்கு எதிராக விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையால் அவரின் அரசியல் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பாகிஸ்தான் பிரதமருக்கு, 2016-ல் தொடங்கப்பட்ட இந்த சகாப்தம் இன்னும் ஒரு முள்ளாக உறுத்துகிறது.

ஆனால், ஆளும் கட்சிக்கு கடுமையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் 2018-ம் ஆண்டு திட்டமிடப்பட்ட பொது தேர்தலுக்கு முன்னதாகவே அவரது ராஜினாமாவை நோக்கி எதிர்கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

ஷெரிஃப் குடும்பத்திற்கு எதிரான பண மோசடி குற்றச்சாட்டுகளை விசாரித்த விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை ஜூலை 10-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது.

குடும்பத்தின் அறியப்பட்ட வருமானத்திற்கான ஆதாரங்களுக்கும் அவர்களின் உண்மையான செல்வத்திற்கும் வெளிப்படையான வேறுபாடுகள் இருப்பது அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பொறுப்பு கூறும் ஆணையத்திற்கு இந்த விவகாரத்தை மாற்றவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால், விசாரணைக் குழு அதன் சொந்த பரிந்துரைகளை செயல்படுத்த சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதே ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சியின் வாதமாக இருக்கிறது. இந்தப் பரிந்துரையை அக்கட்சி கண்டிக்கிறது.

இது ஏன் நடந்தது?

2016-ம் ஆண்டு பனமாவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் ஃபொன்சேகாவிலிருந்து கசிந்த ஆவணங்களில், பாகிஸ்தான் பிரதமரின் மகன்கள் ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் மட்டுமல்லாது அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோருக்கு வெளிநாடுகளில் வரி ஏய்க்க உதவும் நிறுவனங்களுடன் இருந்த தொடர்பு பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர்கள் குவித்த சொத்துகளுக்கான ஆதாரங்கள் மீது கேள்விகள் எழுந்தன. ஆனால், பனாமா ஆவணங்களில் பிரதமரின் பேர் குறிப்பிடப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆவணங்கள் வெளியான பின்பு, எதிர்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப்க்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தொடுத்தார். 1990 களில் நவாஸ் ஷெரிஃப் பாகிஸ்தான் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த போது அந்த பதவியை பயன்படுத்தி அவரது குடும்பம் சட்டத்தை உடைத்து அதன் மூலம் பலன் பெற்றதாகவும் கூறினார்.

இதன் பின்னர் எதிர்க்கட்சி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது; பாகிஸ்தான் ஊடகங்களால் பனாமாகேட் என்று குறிப்பிடப்பட்ட அந்த வழக்கை விசாரிக்கவுள்ளதாகவும் அறிவித்தது. 2017-ம் ஆண்டில் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான விசாரணையை தினந்தோறும் நடத்தியது.

அந்த நேரத்தில், பிரமரின் குற்றங்களை நீதிமன்றம் கண்டறிந்து அவரை பதவி நீக்கம் செய்யுமா என்பது போன்ற யூகங்கள் அதிகமாக நிலவின. ஆனால், ஐந்து நீதிபதிகளைக் கொண்டிருந்த விசாரணை அமர்வானது இரண்டு பிளவுபட்ட தீர்ப்புகளை ஏப்ரல் 20-ம் தேதி அறிவித்தது, இரண்டு நீதிபதிகள் பிரதமருக்கு எதிராகவும், மூன்று நீதிபதிகள் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதன் விளைவாக கூட்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு குடும்பத்தின் சொத்து சார்ந்த 13 சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை 60 நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃப் விசாரணைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆஜரானார். பதவியில் இருக்கும் போதே விசாரணைக் குழு முன்பு ஆஜரான முதல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான எதிர்வினைகள் என்ன?

டிவிட்டரில் 3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட மர்யம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( நவாஸ்) கட்சியின் சார்பாக விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்து கடுமையான வார்த்தைகளைக் கொண்ட பதிவினை டிவீட் செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மேலும், செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் இந்த அறிக்கையை விமர்சித்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இந்த அறிக்கை இம்ரான் கானின் அரசியல் நோக்கங்களுக்கு உகந்ததாக இருப்பதாக தெரிவித்தனர். திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசன் இக்பால், இந்த விசாரணை அறிக்கையை `பயனற்ற குப்பை` என்று குறிப்பிட்ட அதே நேரத்தில் விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிட்ட வழக்கறிஞர் சஃபருல்லா கான் கூட்டு விசாரணைக் குழுவில் இருந்த 6 பேரில் 4 பேர் சட்ட விசாரணைகளைக் கையாள்வதில் எந்தவித முன் அனுபவமும் இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார்.

மற்றொரு புறம், பிரதமர் பதவி விலகுவதற்கான தனது கோரிக்கையை வலியுறுத்திய இம்ரான் கான், ` இனிமேல் பொது பதவியில் இருப்பதற்கு அவர் ஏற்புடையவர் இல்லை ` என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்த அன்றே தார்மீக அடிப்படையில் அவர் விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பில்வால் பூட்டோ சர்தாரி, பிரதமர் காலதாமதமின்றி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான `டான்` கூட்டுக்குழு அறிக்கையின், நியாயமான பாரபட்சமற்ற தன்மை நிறுவப்படவேண்டும் என்பதுதான் முதன்மையானது ` என்று தெரிவித்தது.

மேலும், `இதற்கு முன் உள்ள தெரிவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்` என நீதிமன்றத்திடம் வலியுறுத்திய அந்த நாளிதழ்,` தயாராக இருக்க வேண்டும்` என்றும் `ஜனநாயகத்தின் பொருட்டு முறையானவற்றை செய்ய வேண்டும்` என்றும் ஆளும் கட்சியை கேட்டுக்கொண்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

` பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தோல்வியை தழுவுவது போன்று தோன்றும், கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது ஏற்கனவே நாசத்தை ஏற்படுத்திவரும் அரசியல் சூறாவளியில் அவரை தள்ளும், ` என்று தேசியவாத கன்சர்வேட்டிவ் நாளிதழான `தி நேஷன்` குறிப்பிட்டது.

நடுநிலை ஆங்கில நாளிதழான `தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்` `தேர்தல் நடைமுறைகளில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( நவாஸ்) 2018-தேர்தலில் வாக்குகளை பெற்று ஆட்சியில் தொடர போதுமான சாதகமான அம்சங்களை அது தக்க வைத்துள்ளது - ஆனால், தனிப்பட்ட முறையில் அது சேதத்தை ஏற்படுத்தும்` என்று செய்தி வெளியிட்டது.

அடுத்து என்ன நடக்கும்?

அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. உடனடி முடிவுகள் எதுவும் அப்போது வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

அறிக்கையை நீதிமன்றம் இனிமேல் தான் மீளாய்வு செய்யவுள்ளது; இதுவரை கண்டறிந்தவற்றை பயன்படுத்தி மேலும் எவ்வாறு தொடர வேண்டும் என முடிவு எடுக்கப்படும்.

இறுதித் தீர்ப்பு வழங்கப்படுமுன் மனுதாரர் மற்றும் பிரதிவாதி என இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும்.

நவாஸ் ஷெரிஃப் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தற்சமயம் அவர் தான் பிரதமர், அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை.

ஆனால், நவாஸ் ஷெரிஃப் விசாரணை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், மேல்முறையீடு செய்வதற்கான உரிமை பிரதமருக்கு உள்ளது. ஆனால் அது நீண்ட ஒரு வழிமுறையின் ஒரு தொடக்கமாக இருக்கும்.

இதையும் படிக்கலாம், பார்க்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்