காவல் அதிகாரியைத் தாக்கியதாக மாற்றுத்திறனாளி சிறையிலடைப்பு: ரஷ்யாவில் கடும் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Twitter

ரஷ்யாவைச் சேர்ந்த மிகவும் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, அந்நாட்டு சமூக வலைத்தளப் பயனாளிகளிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

ஆண்டன் மாமேவ், 28, 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோஃபி' ( spinal muscular atrophy) என்னும் அரிதாக ஏற்படக்கூடிய முதுகு தண்டுவடக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலி இல்லாவிடில் அவரால் முற்றிலும் நடமாட முடியாது.

நிலைமை இப்படி இருப்பினும், ஒரு முன்னாள் சிறப்புக் காவல் படை அதிகாரியைத் தாக்கியதாகவும் அவரின் இருசக்கர வாகனத்தைத் திருடியதாகவும் மாமேவ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாதுகாப்பு கேமராவில் எடுக்கப்பட்ட குறைந்த நேரமே ஓடக்கூடிய ஒரு காணொளி உள்ளிட்டவை அவருக்கு எதிரான ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணொளி அவர் புகைபிடித்துக்கொண்டு நல்ல உடல் நிலையில் இருக்கக்கூடிய இரு ஆண்களுடன் வருவதைக் காட்டுகிறது. பின்னர் அந்தக் காணொளி ரஷ்ய நாட்டு சமூக வலைத்தளமான கோன்தக்தேவில் (VKontakte), "மாஷ்" என்னும் ஒரு குழுவில் பகிரப்பட்டு 80,000 முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

அந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மையால் மாவேவை சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிமன்ற அதிகாரிகள் பின்னர் விளக்கமளித்துள்ளனர். சிறை தண்டனை அனுபவிப்பதில் இருந்து விலக்களிக்கும் நோய்களின் பட்டியலில் அவரின் குறைபாடு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பரவியது. பெரும்பான்மையான ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் அந்த முடிவை விமர்சித்தனர்.

ஒரு பிரபலமான ட்விட்டர் பதிவு மாமேவ் தனது சக்கர நாற்காலியில் இருக்கும் படத்தைக் காட்டியது.

டெலகிராம் (Telegram) என்னும் அரட்டைக்கான செயலியில் ஒரு பிரபலமான பதிவு, அதை "புதினின் ரஷ்யாவை விளக்கும் படம்" என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

50,000-க்கும் மேலானவர்களால் பின்பற்றப்படும் ஸ்டாலின்குலாக் (StalinGulag) என்னும் வலைஞர், "ஆண்டன் சிறைக்கு அனுப்பப்படவில்லை. ஒரு வலி மிகுந்த மரணத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளார்," என்று எழுதியுள்ளார். இந்த வழக்கு குறித்து புதினின் முக்கிய எதிர்ப்பாளரும், ஊழல் எதிர்ப்புப் பிரசாரகருமான அலெக்ஸீ நவல்னியும் கருத்துக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் உண்டாகியுள்ள வீச்சைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மனித உரிமைகள் விசாரணை அதிகாரியான தட்யானா மோஸ்கல்கோவா (Tatyana Moskalkova) மாவேவின் தந்தையைச் சந்தித்தார். "(மாவேவிற்கு) உதவ என் அதிகாரத்திற்கு உட்பட்டு எல்லாவற்றையும் செய்து வருகிறேன்," என்று அவர் பின்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இதனிடையே, போலீசாரின் காவலில் கீழ் மாவேவ் ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு உள்ள குறைபாட்டைக் கருத்தில்கொண்டு அவரின் தண்டனைக் காலத்தைக் குறைக்கலாமா என்று நீதிமன்றம் பின்னர் முடிவெடுக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்