லியு ஷியாவ்போ மரணம்: சர்வதேச விமர்சனங்களை நிராகரிக்கும் சீனா

லியு ஷியாவ்போவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பல உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்ததால் லியு ஷியாவ்போ மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக சீனாவின் மிக முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளரான லியு ஷியாவ்போவை வெளிநாட்டுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்ததற்கு எழுந்து வரும் சர்வதேச விமர்சனங்களை சீனா நிராகரித்துள்ளது.

இந்த பிரச்சனை உள்நாட்டு விவகாரம் எனவும் ``முறையற்ற கருத்துகளைக் கூற`` மற்ற நாடுகளுக்கு உரிமை இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளரான லியு, தனது 61-ஆவது வயதில் மரணமடைந்தார்.

அவருக்கு 2010-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிய நோபல் பரிசுக் கமிட்டி, லியுவின் மரணத்திற்கு சீன அரசு `பெரும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்` என தெரிவித்துள்ளது.

தற்போது வீட்டுக் காவலில் இருக்கும் லியுவின் மனைவியும், கவிஞருமான லியு ஷியாவை விடுதலை செய்யக் கோரி சீனாவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Handout/AFP
Image caption லியு ஷியாவ்போ தனது மனைவி லியு ஷியாவுடன் இருக்கும் புகைப்படம்.(2002-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது)

கடந்த வியாழன்று நண்பகல், தனது மனைவி மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருக்க லியு அமைதியான முறையில் இயற்கை எய்தினார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரான டெங் யூ தெரிவித்துள்ளார்.

தனது மனைவியிடம் கூறிய `நன்றாக வாழுங்கள்` என்பதே அவரின் கடைசி வார்த்தையாக இருந்தது.

லியு மரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கை ஒன்றில், பல உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்ததால் அவர் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச சக்திகள்

இந்த மரணத்தை `அகால மரணம்` என தெரிவித்துள்ள நோபல் பரிசுக் கமிட்டி, சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டுக்கு செல்ல சீனா அனுமதி மறுத்தது `மிகவும் வருத்தத்தை அளிக்கிறது` என கூறியுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக லியு செல்ல இருந்த வெளிநாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான சிக்மர் கேப்ரியல், லியு இடம் மாற்றப்படாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

`ஏன் லியுக்கு இருந்த புற்றுநோய் மிக முன்னதாகவே கண்டறியப்படவில்லை என்ற கேள்விக்கு வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நம்பகத்தன்மையுடனும் பதில் அளிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு உள்ளது` என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல லியுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது தவறான செயல் என பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு லியு வருகை தர முடியாததால், அவரை குறிக்கும் வகையில் காலியான இருக்கை ஒன்று வைக்கப்பட்டிருந்து.

முடக்கப்பட்ட சீன பெருநிலப்பரப்பு

சீனாவின் பெருநிலப்பரப்பு பகுதியில், லியுவின் மரணம் குறித்த செய்திகள் தணிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

தெளிவான தகவல்கள் இல்லாத ஆங்கில செய்திகளைத் தவிர, இதுகுறித்த கிட்டத்தட்ட எந்த செய்தியையும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிடவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான `குளோபல் டைம்ஸ்` செய்தித்தாள் தனது ஆங்கிலப் பதிப்பில், லியு மேற்குல நாடுகளினால் `தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதிப்பிற்குள்ளானவர்` என தெரிவித்துள்ளது.

`லியுவின் சிகிச்சை குறித்து சீனா கவனம் செலுத்தி வந்தது. ஆனால் சில மேற்குலக நாடுகள் இந்த மருத்துவ சிகிச்சையை மனித உரிமை விவகாரமாக மிகைப்படுத்தி, அதனை எப்போதும் அரசியலாக்கி வந்தன` என அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சீனாவின் சமூக வலைத்தளங்களில் லியுவின் மரணம் குறித்து பதிவிடப்பட்ட பல கருத்துகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

எந்த விதமான அஞ்சலிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யக் கூடாது என சீனாவில் இருக்கும் லியுவின் நண்பர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய ஜெர்மனியையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டைன்ச்சி மார்ட்டின் -லியாவோ ,`பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர்.` என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சீன பெருநிலப்பரப்பின் வெளியில் உள்ள சமூக ஆர்வலர்கள், லியுவிற்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption கடந்த வியாழன்று இரவு, லியூ மறைவுக்கான இரங்கல் கூட்டத்திற்காக, ஹாங்காங்கில் உள்ள சீன உறவு அலுவலத்திற்கு வெளியே அவரின் ஆதரவாளர்கள் கூடினர்.

யார் இந்த லியு ஷியாபோ?

பல்கலைகழக பேராசிரியராக இருந்து, தீவிர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறிய லியுவை, குற்றவாளி என முத்திரையிட்ட அதிகார மையங்கள், வாழ்நாள் முழுவதும் பல முறை அவரை சிறையில் அடைத்தன.

1989-ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில், அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றிவர்களில் லியு ஷியாபோவுக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

மின்னஞ்சலையும் உயிலாக அங்கீகரிக்க விரைவில் புதிய சட்டம்

அறுவை சிகிச்சை மூலம் கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்..!

திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

பாகிஸ்தானின் ரகசிய நாத்திகவாதிகள்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்