'சசிகலாவுக்கு எதிரான புகாரில் சமரசம் கிடையாது': டிஐஜி ரூபா உறுதி

டிஐஜி ரூபா படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption டிஐஜி ரூபா

கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா மொட்கில் தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் இன்று டிஐஜி ரூபா கூறுகையில், "பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியே அங்கு ஆதாரங்களைத் திரட்டினேன்" என்றார்.

சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட வசதிகள், சிறை விதிகளுக்கு முரணானது என்பது அங்கு பணியாற்றிய குறிப்பிட்ட சில அலுவலர்களுக்கு தெரியும் என்றும், உயர்நிலைக்குழு விசாரணை முடிவில், அந்த உண்மை வெளிவரும் என்றும் ரூபா கூறினார்.

சிறப்புச் சலுகைகளை சசிகலா அனுபவித்தது பற்றி அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றத்தில் யாராவது முறையீடு செய்தால், சசிகலாவின் செயலை மிக கடுமையானதாகக் கருதி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றார் ரூபா.

படத்தின் காப்புரிமை Google
Image caption பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

தனக்கு எதிரான புகார் குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி டிஜிபி சத்யநாராயணராவ் அளித்துள்ள நோட்டீஸ் குறித்து ரூபாவிடம் கேட்டதற்கு, அதற்கு சட்டப்படி பதில் அளிப்பேன் என்றும், இந்த விஷயத்தில் கடமையை மட்டுமே செய்துள்ளதால் யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று பதிலளித்தார்.

சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள், தெல்கி உள்பட குறிப்பிட்ட சில தண்டனைக் கைதிகளுக்கு விதி மீறி அளிக்கப்பட்ட வசதிகள் தொடர்பான அறிக்கையில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்தார்.

பின்னணி

கர்நாடகாவின் பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிகளை மீறி, சலுகைகளை சசிகலா அனுபவித்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள், சிசிடிவி விடியோ காட்சிகள், சில வாரங்களுக்கு முன்பு இந்திய தனியார் ஊடகங்களில் ஒளிபரப்பாகின.

படத்தின் காப்புரிமை Getty Images

சமூக ஊடகங்களிலும் அவை வேகமாகப் பரவி, கர்நாடகம் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிறைத்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது பற்றி அவரிடமே டிஐஜி ரூபா அறிக்கை அளித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

பரஸ்பரம் புகார்

இந்த குற்றச்சாட்டுகளை டிஜிபி சத்யநாரயணராவ் மறுத்து ஊடகங்களிடம் பேட்டி அளித்தார். டிஐஜி ரூபாவும் தமது அறிக்கையில் சிறை முறைகேடுகள் மட்டுமே சுட்டிக்காட்டியதாக விளக்கி பேட்டி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, சிறையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து உயர்நிலைக்குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது.

Image caption கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா

இந்த நிலையில் டிஐஜி ரூபாவை இடமாற்றம் செய்து, பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவு ஆணையராக கர்நாடக அரசு நியமித்தது. சத்யநாராயணா ராவ் விடுப்பில் அனுப்பப்பட்டார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இதற்கிடையே, சிறை வளாகத்தில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க உதவிய சிறைக் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் கர்நாடகத்தின் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்(என்எச்ஆர்சி) கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ஷோபா கரன்ட்லஜே புகார் அளித்தார்.

அந்த புகாருக்கு பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கும், சிறைத் துறை தலைமை அதிகாரிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்