செல்பேசியின் பெரிய எழுத்துருவால் சிக்கிய பாலியல் குற்றவாளி

விமானப் பயணத்தின்போது, செல்பேசியின் எழுத்துருவைப் பெரிதாக வைத்துக்கொண்டு, ஒரு நபர், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குறித்து செல்பேசியில் வேறு ஒருவருடன் குறுஞ்செய்தி மூலமாக உரையாடிக்கொண்டிருந்தபோது, அதை ஒரு மழலையர் பள்ளி ஆசிரியர் கண்டு பிடித்துவிட்டார்.

படத்தின் காப்புரிமை San Jose Police
Image caption விமானத்தின் ஒரு பயணி அளித்த தகவலால் கெல்லர் மற்றும் பர்ன்வொர்த்தை காவல் துறையினர் கைது செய்தனர்

பெயர் வெளியிடப்படாத அந்த ஆசிரியையால், அமெரிக்காவில் சியாட்டில் நகரில் இருந்து சான் ஜோஸ் நகருக்கு மேற்கொண்ட விமானப் பயணத்தின்போது, தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபரின் குறுஞ்செய்தி உரையாடலை, பெரிய திரையைக் கொண்ட ஸ்மார்ட் செல்பேசியில் பெரிய எழுத்துருவுடன் இருந்ததால் அதைப் படிக்க முடிந்தது.

அந்த செல்பேசியில் திரையைப் படம் பிடித்த அந்த ஆசிரியை, விமான ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் மூலம் மைக்கேல் கெல்லர் என்னும் நபரையும், பின்னர் கெய்ல் பர்ன்வொர்த் என்னும் நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஐந்து மற்றும் ஏழு வயதான இரண்டு குழந்தைகள் அவர்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தினர் அந்த உரையாடல் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். கலிஃபோனியாவில் உள்ள மினெட்டா சான் ஜோஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும், கெல்லர் கைது செய்யப்பட்டார்.

சான் ஜோஸ் காவல் துறையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி பிரையன் ஸ்பியர்ஸ், அந்த ஆசிரியை துரிதமாகச் செயல்பட முடிவெடுக்கவில்லை என்றால், "அந்த நபரைக் கைது செய்திருக்க முடியாது," என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கெல்லர், சியாட்டிலில் இருந்து சான் ஜோஸுக்கு பயணித்தார்.

என்.பி.சி பே ஏரியா தொலைக்காட்சியிடம், "அந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்காவிட்டால், இன்னொரு பாலியல் தொந்தரவு நடந்திருக்கும்," என்று கூறினார்.

ஒரு பெண் தன்னைப் படம் எடுக்கிறார் என்பதைக்கூடக் கவனிக்காமல், கெல்லர் "எதைப்பற்றியும் கவலைப் படாமல்" குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தது ஒரு வருத்தத்திற்குரிய விடயம் என்று தெரிவித்த ஸ்பியர்ஸ் "அது அந்த உரையாடலை விளம்பரப்படுத்துவதைப் போன்றது," என்றார்.

மெர்குரிநியூஸ்.காம் எனும் இணையத்தளத்தின்படி, அந்தக் குறுஞ்செய்திகள் பரவசத்திற்காக அனுப்பப்பட்டவை என்று கெல்லர் கூறினாலும், தொடர் விசாரணையில், கெல்லர் சுமார் ஓராண்டு காலமாக உறவாடி வரும் பர்ன்வொர்த் எனும் பெண்ணும் அதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் இரு குழந்தைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன் மாகாணத்தின், டகோமா நகரைச் சேர்ந்த 56 வயதான கெல்லர், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றது மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபடத் திட்டமிட்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சான் ஜோஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே டகோமா நகரைச் சேர்ந்த 50 வயதான பர்ன்வொர்த், இளஞ்சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, குழந்தையைப் பாலியல் வல்லுறவு செய்தது, பாலியல் ரீதியான செயல்களில் இளஞ்சிறார்களை வெளிப்படையாகப் பங்கேற்க வைக்கும் செயலில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :