கருத்தடை செய்துகொண்டால் சிறையிலிருந்து விடுதலை: சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க நீதிபதி!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ஒரு சிறை, நீண்ட காலக் கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் கைதிகளின் தண்டனைக் காலத்தில் இருந்து 30 நாட்களைக் குறைத்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வைட் கவுண்ட்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் ஒரு கைதி

வைட் கவுண்டியில் உள்ள ஸ்பார்ட்டா என்னும் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகமாக நிலவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் இதன்மூலம் குறையும் என்று காவல் துறையினர் கூறினாலும், சிறப்பான அறிவுத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களை தவிர மற்றவர்களை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருந்து தடுக்கும் முயற்சி இது என்று இதை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த டியோனா டோலிசன் என்னும் பெண் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாம் பென்னிங்ஃபீல்டு இந்தப் புதிய திட்டம் குறித்து அறிவித்தார்.

தன்னை நம்பியுள்ள மூன்று மகள்கள், ஒரு பேரக் குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரைப் பார்த்துக் கொள்ள, தான் விரைவில் சிறையில் இருந்து வெளியேற வேண்டும் என்பதால் நான்கு ஆண்டு காலம் கருத்தடைக்கு அவரை உள்ளாக்கும் சிகிச்சைக்கு அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தத் திட்டம் அந்த சிறைச்சாலையில் செயல்படுத்தப்படுவது உள்ளூர் ஊடங்கங்களுக்கு தெரிய வந்தததும், அமெரிக்கா முழுவதும் பரபரப்பான செய்தியானது.

Image caption டியோனா டோலிசன்

ஏழ்மை நிலையில்இருப்பவர்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையனார் ஆகியோருக்குக் கட்டாய கருத்தடை செய்வது அமெரிக்காவில் நெடுங்காலமாகவே நிலவி வருகிறது.

சமீப காலங்களில் அமெரிக்கப் பூர்வ குடிகள், மெக்சிக்க வம்சாவளி அமெரிக்கர்கள் மற்றும் கறுப்பினத்தவர்கள் ஆகியோர் கட்டாயமாகவோ அல்லது வேறு சிகிச்சை எடுக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலோ கருத்தடைக்கு ஆளாகியுள்ளனர்.

அறிவுத்திறன் மற்றும் உடல்நலம் உள்ளவர்களை மட்டும் இனவிருத்தி செய்ய வைக்கும் நோக்குடன் அமெரிக்காவில் இயங்கிய இனமேம்பாட்டு இயக்கங்களைக் கண்டு அடோல்ஃப் ஹிட்லர் வியந்ததோடு, அதை ஜெர்மனியை ஆட்சி செய்த நாஜிக்கள் பின்பற்றவும் செய்தார்.

1920-களில் இந்தக் கருத்தடை முறை மிகவும் அதிகமாக நிலவியது. அமெரிக்காவில் உள்ள மாகாண அரசுகள் 1980களில் கட்டாயக் கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

Image caption நீதிபதி சாம் பென்னிங்ஃபீல்டு

ஏதாவது ஒரு காலகட்டத்தில், அமெரிக்காவில் உள்ள 32 மாகாணங்களில் இருக்கும் சிறைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கருத்தடை செய்வதற்கான திட்டங்கள் அமலில் இருந்துள்ளன.

ஓரினச் சேர்க்கையாளர்கள், அரசின் சமூகநல உதவிகளைப் பெற்ற தாய்மார்கள் ஆகியோருக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. சில சிறைகளில் விடுதலை ஆவதற்கான நிபந்தனையாக கருத்தடை செய்வது இருந்தது.

சிறையில் இருந்த பெண்களின் முழு ஒப்புதலையும் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை சிகிச்சையால், அவர்களின் கருப்பையில் உள்ள ஃபாலோப்பியன் குழாயில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு கலிஃபோர்னியா இத்திட்டத்துக்குத் தடை விதித்தது.

சிறைக் கைதிகளின் ஒப்புதலுடன்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று டென்னசி மாகாண அதிகாரிகள் கூறினாலும், விரைவில் வெளியேற விரும்பும் சிறைக் கைதிகளால் இது போன்ற ஒரு சூழலில் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கும் வழக்குகளை வைட் கவுண்ட்டி நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ளது.

இனப்பெருக்க உரிமைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதை எதிர்க்கும், ஒரு உள்ளூர்வாசியான மைக் கில்பர்ட், "சில நேரங்களில் நீதிபதிகள் தங்கள் வரம்புகளை மீறுகிறார்கள்," என்கிறார்.

ஆனால், தனக்கு வரும் கண்டனங்கள் வியப்பளிப்பதாகக் கூறும் நீதிபதி சாம் பென்னிங்ஃபீல்டு, இது பற்றி ஊடங்களில் வரும்வரை யாரும் பேசவில்லை என்கிறார்.

கருவில் உள்ள சிசுக்களின் மீது போதைப்பொருள் உண்டாக்கும் தாக்கங்களைப் பற்றி வகுப்பெடுக்க சுகாதார அதிகாரிகள் சிறைக்கு வந்தபோது இத்திட்டம் தொங்கப்பட்டதாக பென்னிங்ஃபீல்டு கூறுகிறார்.

ஆனால் டென்னசி மாகாண சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளது.

கருத்தடை செய்து கொள்பவர்களுக்கு சன்மானம் அளிக்கும் நோக்குடன்தான் அந்தத் தீர்ப்புகளை எழுதியதாகக் கூறும் பென்னிங்ஃபீல்டு, இந்த விவகாரம் பெரிதானதும் வெறும் 30 நாட்களுக்காக கருத்தடை செய்துகொள்பவர்கள் இருப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.

Image caption டென்னசி மாகாணத்தில் உள்ள ஸ்பார்ட்டா நகரம்

சக நீதிபர்கள் உள்பட பலரின் கண்டனங்களைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்புகளை அவர் ரத்து செய்தாலும், போதைக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் நலமுடன் பிறக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன்தான் அதைச் செய்ததாகக் கூறுகிறார்.

யாருக்கும் அத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்று வைட் கவுண்ட்டி சிறை அதிகாரிகள் கூறினாலும், சிறையில் தனக்கு வழங்கப்பட்ட கருத்தடை சிகிச்சைகளால் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நிற்காத மாதவிடாய், பிறப்புறுப்பில் தொற்று, எடை அதிகரிப்பு உள்ளிட்ட உடல் கோளாறுகளைச் சந்தித்ததாக கூறுகிறார் கிறிஸ்டி செய்பர்ஸ் என்னும் பெண்.

ஆனால், கிறிஸ்டியின் தண்டனைக் காலத்தில் 30 நாட்கள் குறைக்கப்படவே இல்லை. அவர் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனமும் இன்னும் அகற்றப்படவில்லை.

Image caption கிறிஸ்டி செய்பர்ஸ்

பிபிசியிடம் பேசிய மூன்று பெண்கள், சிறையில் தங்கள் முடிவை மாற்றிய பின்னர், தங்கள் உடலில் உள்ள கருத்தடை சாதனத்தை அகற்ற 60 நாட்கள் காத்திருக்க வேண்டும் அல்லது சிகிச்சை செலவுக்கு 250 டாலர் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறை கைதிகளின் வழக்கறிஞரான, மரியோ வில்லியம்ஸ், "எளிதில் இலக்காகும் நிலையில் இருக்கும் மனிதர்களை நீங்கள் குறிவைக்கிறீர்கள்," என்கிறார்.

அரசால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணரும் கிறிஸ்டி, தனது பாலியல் உணர்வுகளை முற்றிலும் இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.

இந்த ஊடக வெளிச்சம், சிறைக்குள் கைதிகள் நடத்தப்படும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் நம்புகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :