நிர்பந்தப்படுத்தி பதிவு செய்யப்பட்டதா சீன செயற்பாட்டாளர் மனைவியின் காணொளி?

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption லியு சியாவ்போவின் மனைவி லியு சியா

சீனாவில் சமீபத்தில் உயிரிழந்த செயற்பாட்டாளரும், நோபல் பரிசை வென்றவருமான லியு ஷியாவ்போவின் மனைவி இணையத்தில் வெளியான காணொளி ஒன்றில் தோன்றியுள்ளார். கணவரின் மறைவையடுத்து, அவர் தோன்றும் முதல் காணொளி இது.

பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருக்கும் லியு ஷியாவை, கணவரின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்குப் பிறகு காண முடியவில்லை.

சிறிய காணொளி பதிவில் பேசியுள்ள லியு ஷியா, கணவரின் இழப்பு குறித்து துக்கம் அனுசரிக்க தனக்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படுவதாக அதில் கூறியுள்ளார். ஆனால், லியு ஷியாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து லியு ஷியா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது எந்தவொரு குற்றம் புரிந்ததற்கான வழக்குகளும் இல்லை.

கையில் சிகரெட் ஒன்றை பிடித்தபடி வீட்டின் முன்னறையிலிருந்து பேசுவதை போன்று காணொளியில் தோன்றுகிறார் லியு ஷியா. கேமராவை பார்த்து பேசும் ஷியா, தனது கணவரின் இறப்பால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீண்டு வருவதாகவும், காலப்போக்கில் தான் சரியாகிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த காணொளியை பதிவு செய்தது யார் மற்றும் எங்கு வைத்து இது பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து எதுவும் தெளிவாக தெரியவில்லை. இதன் காரணமாக, நிர்பந்தத்தின் பேரிலேயே லியு ஷியா இவ்வாறு பேசியிருக்கலாம் என்ற ஊகங்களுக்கு வழி ஏற்பட்டுள்ளது.

''இந்த காணொளியில் பேச அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதே உண்மை '' என்று கூறியுள்ளாஏ எஃப் பி செய்தி முகமையிடம் பேசிய லியு சியாவின் நண்பர் ஒருவர்.

''மனதில் படும் விஷயங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூட ஒருவருக்கு இங்கு உரிமையில்லையா?'' என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

லியு ஷியா ஒரு சுதந்திரமான சீன பிரஜை என்றும், தற்போது அவர் தனிமையில் தனது கணவரின் மரணத்தை அடுத்து இரங்கலைக் கடைபிடித்து வருவதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்