ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடியாது: டிரம்ப் உறுதி

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற முடியாது: டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அவசரமாகத் திரும்பப் பெற்றால் அங்கு ஏற்படும் வெற்றிடத்தைப் பயங்கரவாதிகள் நிரப்ப நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும் என்பது, தனது உண்மையான உள்ளுணர்வாக இருந்தது. ஆனால்,இராக்கில் செய்தது போன்ற தவறை தவிர்க்க ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து படைகளை நீடிக்கச் செய்து `வெற்றிக்குப் போராட` முடிவு செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில், காலம் தவறாத அணுகுமுறைகளுக்குப் பதிலாக கள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட ராணுவ அணுகுமுறையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக டிரம்ப் கூறினார். ஆனால், அதற்கான காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

``ஆப்கானிஸ்தானில் முன்னேற்றம் ஏற்படும் வரையில், அமெரிக்கா ஆப்கான் அரசுடன் இணைந்து செயல்படும்`` என்கிறார் டிரம்ப்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதன் படைகளை திரும்பப் பெறாவிட்டால், ஆப்கான் அமெரிக்காவுக்கு "மற்றொரு கல்லறை" ஆக இருக்கும் என தாலிபான்கள் பதிலடியளித்துள்ளனர்.

ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை முடிக்கிவிட டிரம்ப் உறுதி பூண்டுள்ளார்.

தனது புதிய அணுகுமுறை கருத்தியலாக இருப்பதை விட நடைமுறைக்கு ஏற்றவிதத்தில் இருக்கும் என கூறியுள்ளார்.

தனது அணுகுமுறை நாட்டைக் கட்டமைப்பதை விட `தீவிரவாதிகளைக் கொல்லுவது` குறித்தே முக்கியத்துவம் செலுத்தும் என்கிறார் டிரம்ப்.

4000 கூடுதல் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படைகள் அதிகரிப்பு குறித்து டிரம்ப் எந்த கருத்தும் கூறவில்லை.

ஆப்கானிஸ்தானில் இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்க படைகள் இருக்கும் என்பது குறித்த எந்த கால அளவையும் அவர் அறிவிக்கவில்லை.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், தாலிபானுடனான சமாதான உடன்படிக்கைக்கு டிரம்ப் முதல்முறையாகக் கதவை திறந்து விட்டுள்ளார்.``ராணுவ முயற்சிக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைப் பெற முடியும்`` என அவர் கூறியிருக்கிறார்.

அதே சமயம், அல் கய்தா மற்றும் இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவிற்கு எதிரான போர் தீவிரமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இத்திட்டத்தை வரவேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி,`` நாம் எல்லோருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்க- ஆப்கான் கூட்டணி முன்பை விட வலுவாக இணைந்துள்ளது`` என கூறியுள்ளார்.

புதிய அணுகுமுறை ஆப்கான் பாதுகாப்புப் படைகளின் பயிற்சிக்கு உதவும் என்றும் கானி கூறினார்.

இந்தியா வரவேற்பு:

ஆப்கனில் படைகளைத் திரும்பப் பெறுவதில்லை என்ற அதிபர் டிரம்பின் உறுதியை இந்தியா வரவேற்றுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆப்கானிஸ்தானில் எதிர்கொள்ளும் சவால்களையும் அந்நாட்டை பாதுகாப்பான புகலிடமாகவும் வேறு வழியிலான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்காகவும் பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்காகவும் எதிராட போராட வேண்டும் என்ற அதிபர் டிரம்பின் கவலையையும் நோக்கங்களையும் இந்தியாவும் பகிர்ந்து கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் முயற்சிகளுக்கு தொடர்ந்து இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்