பிரான்ஸ்: வணிக நோக்கில் மாடல்களின் புகைப்படத்தை ஒல்லியாகக் காட்டினால் சிக்கல்!

மாடல்களின் புகைப்படங்களை மேலும் மெருகேற்றிக் காட்ட 'ரீ டச்சிங்' எனச் சொல்லப்படும் யுக்தி கையாளப்படுவது ரகசியமான விஷயமொன்றும் அல்ல. மாடல்களின் உடலில் சில பாகங்களை மெலிவாக்கவும், சிலவற்றை வளைவாக்கவும், மாடல்கள் அணிந்த உடைக்கு ஏற்றவாறு கால்களின் நீளத்தை சரிசெய்யவும், கண்களை விரிவாக்கவும் புகைப்படங்களில் 'ரீ டச்சிங்' எனும் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Alamy

ஃபிரான்ஸ் நாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வணிகநோக்கில் பயன்படுத்தப்படும் எந்த புகைப்படத்திலும் அதில் உள்ள மாடல்களை ஒல்லியாகக் காட்டும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்திருந்தால் 'இந்தப் படம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது' என சிகரெட் பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கைகளைப் போல குறிப்பிட வேண்டும்.

இந்த விதியை யாரெல்லாம் மீறுகிறார்களோ அவர்களுக்கு 37,500 யூரோக்கள் அல்லது அந்த விளம்பரத்தை எடுப்பதற்கு செலவிடப்பட்ட தொகையில் 30% அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்களின் பொது ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ள 'திருத்தப்பட்ட புகைப்படங்களை' சமாளிக்க அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாடல் தொழிலுக்காக தங்களை மிகவும் மெலிவாக்கிக் கொள்பவர்களுக்கு இதுபோன்ற சட்டங்கள் உதவும் என நம்பப்படுகிறது.

மேலும் எதிர்பார்த்த அளவுக்கு தங்களது உருவப் புகைப்படங்கள் இல்லாததால் பெருங்கவலை கொள்பவர்களிடத்தில் அவர்கள் காணும் பல மாடல்களின் புகைப்படங்கள் கணினி நிரல்கள் மூலமாக உருவாக்கப்பட்ட போலியானவை என புரியவைக்க உதவும் என நம்பப்படுகிறது.

"செயற்கையாக திருத்தங்கள் செய்யப்பட்டு மற்றும் நம்பமுடியாத வகையில் இருக்கும் புகைப்படங்களை அம்பலப்படுத்துவது, உருவம் தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் உள்ள சுய மதிப்பிறக்கம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் " என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மரிசொல் டூரைன்.

படத்தின் காப்புரிமை Sarah Brimley
Image caption பிபிசியின் டுலிப் மசும்தார் தனது புகைப்படத்தை போட்டோஷாப் செய்தபோது உண்மையான புகைப்படத்தில் வயதான, சோர்வடைந்த தோற்றத்தை பெற்று இருப்பதாக உணர்ந்தார்.

இதுபோன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஃபிரான்ஸ் அல்ல. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் இஸ்ரேல் ஏற்கனவே இதைச் செய்திருக்கிறது.

ஆனால், மெலிந்த தேகத்துடன் இருப்பது ஃபிரான்சில் அதிகளவில் கவனம் ஈர்த்துள்ளது. அந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கன மக்கள் அனோரெக்சியா எனும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் (அனோரெக்சியா என்பது மெலிந்த தேகத்துடன் உடல் எடையை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உண்ணுதல் ஏற்படும் பிரச்சனையால் உண்டாகும் ஒரு மன நலன் சார்ந்த கோளாறு)

ஒருவர் தனது உயரத்துக்கு ஏற்றவாது சராசரி எடையில் இருக்கிறாரா, அதிகளவு எடை கொண்டிருக்கிறாரா அல்லது மிகக்குறைந்த எடையில் உள்ளாரா என்பதை கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படும் பிஎம்ஐ எனும் சராசரி உடல் நிறை குறியீட்டெண்ணில் ஐரோப்பாவிலேயே ஃபிரான்ஸ்தான் மிகவும் குறைவான அளவில் இருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வரலாற்றுக்கு வண்ணம் தீட்டும் பெண்

தனது நாட்டில் மெலிந்திருப்பது மரியாதையுடன் பார்க்கப்படுகிறது மற்றும் நிறைய கொழுப்புடன் இருப்பது வெறுக்கப்படுகிறது என ஒரு புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் அந்நூலின் ஆசிரியர் கேபிரியேல் டேய்டியர்.

அதிக பருமனுடன் இருந்ததால் பள்ளியொன்றில் வேலை இழந்ததாகவும், இன்னொரு முறை ஒரு நேர்காணலில் குண்டாக இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் அளவுகள் குறைவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் என நேர்காணல் கண்டவர் சொன்னதைக் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கிறார் கேபிரியேல்.

''விளம்பரங்கள் தனது தயாரிப்புகளை விட அதிகம் விற்கின்றன. விளம்பரங்கள் மதிப்புகளை விற்கின்றன; புகைப்படங்களை விற்கின்றன ; காதல் மற்றும் பாலியலை வெற்றிகரமாக விற்கின்றன. மிக முக்கியமாக இயல்புகளையும் விற்கின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் நாம் யாராக இருக்க வேண்டும் என சொல்ல ஆரம்பிக்கிறார்கள்" என்கிறார் மூத்த விரிவுரையாளரும் பிரசாரகருமான ஜீன் கில்போர்ன்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுபோன்ற கலாசாரம் மாறும். ஆனால் அது மிகவும் மெதுவாக நடக்கும் என உணர்வதாக பிபிசியிடம் தெரிவித்தார் ''தி கான்ஃபிடென்ட் சைல்டு" என்ற நூலின் ஆசிரியரும் மன நல ஆலோசகருமான மருத்துவர் டெர்ரி ஆப்டர்.

உலகின் முன்னணி ஃபேஷன் தொழில் நடக்கும் பிரான்சில் அளவுக்கதிகமான உடல் மெலிவைக் சமாளிக்க பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஒரு நடவடிக்கையை மட்டும் எடுக்கவில்லை. தாங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கிக் காட்ட வேண்டும். இந்த நடை முறை கடந்த மே மாதம் வந்தது. சில பெரிய நிறுவனங்கள் மிக மிக மெலிதாக இருக்கக்கூடிய மாடல்களை தடை செய்திருக்கிறார்கள்.

புகைப்படங்களை போட்டோஷாப் பயன்படுத்தி திருத்தங்களை செய்யவோ மாற்றங்களைச் செய்யவோ அதில் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்க்கவோ செய்யலாம் என்பதை தாண்டி வேறு சில வழிகளும் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கோணத்தில், நல்ல ஒளி வெளிச்சத்தில், வயிற்றை உள்ளிழுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க முடியும். அப்படிச்செய்தால் அந்த மாடல் புகைப்படத்தில் வித்தியாசமாக தோற்றமளிக்க வைக்க முடியும்.

அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். புகைப்படங்களில் தலைமுடியை 'ரீ டச்சிங்' செய்வதையோ அல்லது தோற்றத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால் அதனை சரி செய்யவோ தற்போதைய புதிய பிரெஞ்சு விதியில் எந்த பிரச்னையும் இல்லை.

இந்த புதிய விதி அறிவிக்கப்பட்டதிலிருந்து புகைப்படங்களை விற்கும் நிறுவனமான கெட்டி, 'ரீ டச்சிங்' செய்யப்பட்ட புகைப்படங்களை வணிகப்பகுதியில் இடம்பெற முடியாதவாறு தடை செய்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :