லாஸ் வேகஸ் தாக்குதல்: சந்தேக நபர், சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்?

லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 59 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்கார் என்று தெரிய வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Undated image
Image caption ஸ்டீஃபன் பேடக்

தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேவாடாவில் உள்ள மெஸ்கியூட் பகுதியை சேர்ந்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றப்பின்னணியும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லாஸ் வேகஸ் தாக்குதலுடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்த சந்தேகதாரி ஒரு தீவிர சூதாட்ட பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகே முன்பு குடியிருந்த ஒருவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் ஸ்டீஃபன் பேடக் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஒரு அமெரிக்க அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

லாஸ் வேகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும், பேடக்கின் இரண்டு அறை கொண்ட வீட்டினை விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போலீஸார் பேடக்கின் அறையை நெருங்கும் நேரத்தில், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்றதாக ஷெரீப் தெரிவித்தார்.

"அவரது மத கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை" எனவும் ஷெரீப் கூறியுள்ளார்.

இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரம் கிடைத்துள்ளதா? என ஷெரீப்பிடம் கேட்கப்பட்டது.

"இல்லை. தற்போது எதுவும் இல்லை" என அவர் கூறினார்.

உடனிருந்த தாக்குதல்தாரியின் தோழி?

பேடக் அறையில் தங்கியிருந்த, மரிலோவ் டான்லீயை கண்டுபிடிக்க உதவுமாறு முன்னதாக அதிகாரிகள் கோரியிருந்தனர்.

ஆனால், அவர் விசாரிக்கப்பட்டதாக பின்னர் அதிகாரிகள் கூறினர்.

படத்தின் காப்புரிமை POLICE HANDOUT

மாண்டலே பே ஹோட்டலில் அறை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டான்லீ அவருடன் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மரிலோவ் டான்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

"அப்பெண் பேடக்கின் தோழி" என சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் கூறுகிறார்.

" எனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை" எனவும் எரிக் கூறுகிறார்.

``அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வேகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார்`` எனவும் அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாக எம் பி சி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்