பாகிஸ்தானில் தாய், சேய் உயிரை காப்பாற்றும் 'வீடியோ லிங்க்' கருவி

Tayyaba Anjum Ali kissing newborn son
Image caption தாதி வீட்டிற்கு வந்ததால் டய்யாபா அஞ்சும் அலியின் மகன் பாதுகாப்பான பிரசவத்தில் பிறந்தான்

"ஒன்பது மாத கர்ப்பமாக இருக்கிறேன், பயணிப்பது சிரமமாக இருக்கிறது" என்று சொல்லும் தாதி ஃபாத்திமா, தனது கிளினிக்குக்கு செல்லும் செங்குத்தான கல் படிகளில் கவனமாக நடக்கிறார்.

"ஆனால் நோயாளிகளுக்காக நான் இங்கே வருகிறேன்."

மருத்துவர் அல்லது கர்ப்பம், பிரசவம் பார்த்தல் உள்ளிட்டவற்றை கவனித்துக்கொள்ளும் பயிற்சி பெற்ற தாதிக்கள் இருந்தால் கருவுற்ற பெண்களின் இறப்பு விகிதத்தில் 99% வரை தடுக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தானில், கர்ப்ப காலத்திலோ, பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களினாலோ 20 நிமிடத்தில் ஒருவர் மரணிப்பதாக ஊரக வளர்ச்சி மேம்பாட்டு மையம் கூறுகிறது.

குழுவான தாதிகளுக்கு பயிற்சியளித்து, அவர்களை வீடியோ லிங்க் மூலம் பெண் மருத்துவர்களுடன் இணைக்கும் 'செஹத்கஹானி' எனும் அமைப்பில் ஃபாத்திமா பணிபுரிகிறார்.

அடிப்படை உடல்நல பராமரிப்பை குறைவான விலையிலும், கிராமப்புற பெண்களுக்கு அணுகக்கூடியதாகவும் செய்யும் இந்த வீடியோ ஆலோசனைகள் ரூபாய் 50 ($ 1.30) என்ற குறைந்த விலையில் கிடைக்கின்றன.

Image caption தாதி ஃபாத்திமா தனது மான்செஹ்ரா கிளினிக்கில் வீடியோ லிங்க் மூலம் மருத்துவர்களுடன் அலோசிக்கிறார்

இஸ்லாமாபாதின் வடக்கே 71 கி.மீ. (40 மைல்கள்) தொலைவிலுள்ள மன்ஷெஹ்ராவில் வசிக்கும் ரூபினாமக்தியாரை இன்று பாத்திமா சந்திக்கிறார்.

"இரண்டு மகன்கள் இறந்துபிறந்த எனக்கு நான்கு கருச்சிதைவுகளும் ஆனது, இப்போது நான் இரண்டு மாத கர்ப்பம்" என்கிறார் அவர்.

புதிய தொடக்கங்கள்

முந்தைய கர்ப்பகாலத்தில் 'எக்லம்ப்சியா'வால் பாதிக்கப்பட்டதாக ரூபினா கூறுகிறார். உயர் ரத்த அழுத்தத்தின் ஒரு வடிவமான இது தாயையும் சேயையும் கொல்லக்கூடியது. இதற்கான அறிகுறிகளான கடுமையான தலைவலி, மூட்டு வீக்கம் தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறும் ரூபினா உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம்தான்.

இஸ்லாமாபாத் மருத்துவமனைக்கு அவர் செல்லும்போது, அவரது இரட்டைக் குழந்தைகளை காப்பாற்றமுடியவில்லை.

"அங்கு ஸ்கேன் செய்தபோது, குழந்தைகள் 15 நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

"மகன் வேண்டுமென்பது எனது நீண்ட கால விருப்பம்... ஆனால் இது அல்லாவின் விருப்பம்."

இது ரூபினாவின் பத்தாவது கர்ப்பமாக இருந்தாலும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதும், பயிற்சி பெற்ற தாதி மற்றும் மருத்துவரை அணுகுவதும் இதுவே முதன்முறை.

Image caption ரூபினா (மகள்களுடன்) இறந்துபிறந்த இரட்டை மகன்களை நினைத்து இப்போதும் வருந்துகிறார்

ரூபினாவின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்த ஃபாத்திமா, லேப்டாப் மூலம் மருத்துவரிடம் ஆலோசிக்கிறார். எல்லாமே இயல்பாகவே இருக்கிறது.

"செஹத்கஹானியை பார்க்கும்படி அண்டை வீட்டு பெண் பரிந்துரைத்தார்" என்கிறார் ரூபினா.

"முன்பு கருச்சிதைவுகள் ஏற்பட்டிருந்தாலும், இங்கு வந்ததால் ஆரோக்கியமான மகனை பெற்றெடுப்பேன் என்று நம்புகிறேன்."

ரூபினா பரிசோதனை அறையிலிருந்து சென்றதும், "அவர்களுக்காக வருத்தப்படுகிறேன்" என்கிறார் ஃபாத்திமா.

"பல கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளது, ஒரு தாயால் மட்டுமே அதன் வலியை உணரமுடியும்."

அனுமதி இல்லை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த 'வீடியோ லிங்க்' கருவி தாய்மார்களை காப்பாற்றுமா?

"குடும்பத்திலிருந்து அனுமதி கிடைக்காததால் கடந்த காலத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை" என்கிறார் ஃபாத்திமா.

"பெண்களை மட்டுமே சந்திப்பதால் இங்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறேன், ஆண்களுடன் வேலை செய்ய அனுமதியில்லை."

வீட்டிலிருந்து பெண்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்க தயங்குவதால், தகுதியான ஆயிரக்கணக்கான பெண் மருத்துவர்கள் மற்றும் தாதிகளை பாகிஸ்தான் இழக்கிறது.

மருத்துவ மாணவர்களில் 70% க்கும் அதிகமானவர்கள் பெண்களாக இருந்தாலும் அவர்களின் பாதிப்பேரே மருத்துவராக பணிபுரிவதாக பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கவுன்சில் கூறுகிறது.

மருத்துவர்கள் சாரா சயீத் மற்றும் இஃபத் ஜாஃபர் இருவரும் செஹத்கஹானியை நிறுவினார்கள்.

"நாங்கள் இருவரும் பாகிஸ்தானின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மருத்துவ பட்டம் பெற்றவர்கள்" என்கிறார் டாக்டர் சாரா.

படத்தின் காப்புரிமை Sehat Kahani
Image caption பெண்கள் குறைந்த செலவில் தாதிகளையும், மருத்துவர்களை அணுகும்வகையில் டாக்டர்கள் ஜாஃபர் மற்றும் சாரா சயீத்தும் செஹத்கஹானியை உருவாக்கினார்கள்

"திருமணத்திற்குப் பிறகோ, குழந்தைகள் பிறந்ததுமோ பணிபுரிவதில் நாங்கள் சிக்கலை எதிர்கொண்டதை, இன்று வேலை செய்யாத மருத்துவர்களுடன் தொடர்புபடுத்தமுடிகிறது."

இவர்கள் 2014 இல் 'டாக்ட்ஹெர்ஸை' எனும் நிறுவனத்தை அமைத்தனர். வீட்டிலிருந்தே வீடியோ இணைப்புகளைப் பயன்படுத்தி வேலைசெய்ய இது அனுமதித்தது. குறைந்தவிலையில் சுகாதார பாதுகாப்பு வசதிகள் இல்லாத பாகிஸ்தானின் பெரும்பகுதிக்கு இது உதவியது.

பெண்களின் அடிப்படை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்த சாராவும் இஃபாத்தும், உருது மொழியில் சுகாதாரக் கதை என்று பொருள்படும் செஹத்கஹானி அமைப்பை 2017 இல் அமைத்தனர்.

"கிளினிக்குகளுக்குகூட வரமுடியாத பல்வேறுதரப்பட்ட மக்கள் இருப்பதை உணர்ந்தோம்" என்கிறார் சாரா.

"குடும்பத்திற்கு அவர்களின் ஆரோக்கியம் முக்கியமல்ல அல்லது வீட்டிலிருந்து வெளியே வர அனுமதியில்லை."

"ஒரு மாத்திரை மற்றும் பையை எடுத்துச் செல்லும் ஒரு தாதி அல்லது பெண் சுகாதார தொழிலாளி பற்றி யோசனை வந்தது. மருத்துவமனைக்கு வர முடியாத நோயாளிகளுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆலோசனை வழங்க அவர் பயணிக்கிறார்."

படத்தின் காப்புரிமை Sara Saeed
Image caption தனது மகளுடன் மருத்துவர் சாரா சயீத்

ஃபாத்திமாவின் நோயாளிகளில் ஒருவரான டய்யாபா அஞ்சும் அலிக்கு தற்போது பிறந்த மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.

"முதல் கர்ப்பத்தின்போது மிகுந்த வேதனையை அனுபவித்தேன், ஆனால் இந்த கர்ப்பகாலம் மிகவும் எளிதாக இருந்தது."

"வீட்டில் குழந்தைகள் தனியாக இருப்பதால், வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாது. நான் தாதியை வீட்டிற்கு அழைத்து எந்த பரிசோதனையும் செய்துக்கொள்ளலாம்."

தாயையும் சேயையும் பரிசோதிக்கும் ஃபாத்திமா, தனது டெப்லட் கணினியில் தாய்ப்பால் கொடுப்பதை பற்றி சிறிய வீடியோவை டயாபாவுக்கு காட்டுகிறார்.

"மருத்துவரிடம் செல்வதை அவசியமாக நினைக்காத ஒரு நகரத்தில் வேலை செய்கிறேன், இந்த பெண்களுக்கு விழிப்புணர்வையும், நல்ல மருத்துவர்களையும் வழங்கும் அமைப்புடன் நான் பணிபுரிகிறேன்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :