தென் கொரிய மின்னணு பண மையத்தை ஹேக் செய்ததா வட கொரியா?

படத்தின் காப்புரிமை Reuters

தென் கொரியாவிலுள்ள மின்னணு பணமான கிரிப்டோகரன்சி பரிமாற்று மையமொன்றில் நடந்த ஹேக்கிங் செயல்பாட்டிற்கு வட கொரியாவே பின்னணியில் உள்ளதாக தென் கொரியாவின் புலனாய்வு அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.

குறைந்தது 7 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மின்னணு பணம் ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், தற்போது அப்பணத்தின் மதிப்பு 82.7 மில்லியன் டாலர்களாக இருக்குமென்று கூறப்படுகிறது.

மேலும், 30,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் இந்த ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளது.

மின்னணு பண வகைகளான பிட்காயின் மற்றும் ஈத்திரியத்தை பித்துப் பணப் பரிமாற்று மையத்தில் வர்த்தகம் செய்ததாக தெரிகிறது.

சமீபத்திய வர்த்தக மதிப்புகளின் அடிப்படையில், பித்துப் தென் கொரியாவின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய பெரிய மின்னணு பணப் பரிமாற்று மையமாக திகழ்கிறது.

வட கொரியாவின் அணு ஆயுதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தண்டனையாக அளிக்கப்பட்ட நிதித் தடைகளைத் தவிர்ப்பதற்காக வட கொரிய ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வர்த்தகர்களின் தனிப்பட்ட தகவலை நீக்குவதற்கு ஹேக்கர்கள் 5.5 மில்லியன் டாலர்களை பித்துப்பிடம் கோரியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Bithumb

கடந்த செப்டம்பரில் மற்றொரு தென் கொரிய பணப் பரிமாற்று மையமான கோய்னிஸில் நடந்த ஹேக்கிங் செயல்பாட்டின் பின்னரும் வட கொரியாவே இருக்குமென தேசிய புலனாய்வு அமைப்பை சார்ந்த ஆதாரங்கள் நம்புவதாக தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

ஆனால், அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

அதற்கான ஆதாரங்கள் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கிரிப்டோகரன்சிகள் எனப்படும் மின்னணு பணத்தின் மீது தென் கொரிய நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்றாலும், தற்போது விதிகளை கடுமையாக்கும் முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளது.

பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை காக்க தவறிய பித்துப்பிற்கு தென் கொரிய அரசாங்கம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 55,000 டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :