ஜாதவ் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் சென்ற போது நடந்தது என்ன?- பிபிசி செய்தியாளரின் அனுபவம்

ஜாதவ் - குடும்பத்தினர் சந்திப்பு படத்தின் காப்புரிமை PAKISTAN FOREIGN MINISTRY
Image caption ஜாதவ் - குடும்பத்தினர் சந்திப்பு

பாகிஸ்தானின் பெரும்பாலான மக்கள் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த டிசம்பர் 25-ம் தேதி காலை எழுந்து வேலைக்கு விரைவது கஷ்டமான ஒன்று.

பாகிஸ்தானில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த கைதியான குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்த சந்திப்பு அபூர்வமானது. அதனால், ஊடகங்கள் பரபரப்பானது.

பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு பலூசிஸ்தானில் ஜாதவ் கைது செய்யப்பட்டார்.

ஜாதவ்வின் குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு பிபிசி குழு, சந்திப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜாதவ் குடும்பத்தை சிறப்பாகப் பதிவு செய்வதற்காக, நல்ல இடத்தில் கேமராவை பொருத்தலாம் என நம்பினோம். ஆனால், அங்கு ஏற்கனவே நிறைய ஊடகத்தினர் இருந்ததைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தோம்.

செய்தியாளர்கள் அங்கு நேரலைச் செய்துகொண்டிருந்தனர். ஜாதவ் குடும்பத்தினர் எந்த விமானத்தில் வந்தார்கள், அவர்களின் இருக்கை எண் என்ன? யாருடன் அவர்கள் வந்தார்கள் போன்ற தகவல்களை நேரலை செய்தனர்.

ஊடகத்தினருக்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தது. ஜாதவ் குடும்பத்தினர் ஊடகத்திடம் பேச விரும்பினால் பாகிஸ்தான் தடுக்காது எனவும் வெளியுறவுத்துறை கூறியது. ஆனால், இறுதி முடிவு இந்திய அதிகாரிகளிடமே இருந்தது.

ஊடகத்தினருக்கும், ஜாதவ் குடும்பத்தினர் வந்து இறங்கும் இடத்துக்கும் இடையே எந்த தடுப்பும் இல்லை. ஆனால், கோட்டைத் தாண்டி அவர்கள் அருகில் செல்ல வேண்டாம் என ஊடகத்தினரிடம் கோரப்பட்டது.

இறுதியாக, ஒரு கார் வளாகத்திற்குள்ளே வந்து வெளியுறவுத்துறையின் முக்கிய நுழைவாயில் எதிரே நின்றது.

கேமராமேன்கள் கத்த ஆரம்பித்தனர். ஜாதவ் குடும்பத்தினரை மறைக்க வேண்டாம் என பாதுகப்பு பணியாளர்களிடம் கோரினர். ஜாதவ் குடும்பத்தினரிடம் இருந்து ஏதாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், செய்தியாளர்கள் தங்களது குரலை உயர்த்தி கேள்வி கேட்டனர். ஆனால், யாரும் கோட்டை தாண்டிச் செல்லவில்லை.

ஜாதவ் குடும்பத்தினர் வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது இது நடந்தது.

கார் வருவதற்காக வாசலின் வெளியே ஜாதவ் குடும்பத்தினர் ஒன்றரை நிமிடம் காத்திருந்தனர். செய்தியாளர்கள் தங்களது கேள்விகளைக் கேட்டனர். ஆனால், ஜாதவ் குடும்பத்தினர் அமைதியாகவே இருந்தனர்.

திரும்பச் செல்லும்போதும் ஜாதவ் குடும்பத்தினர் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. அங்கு எழுப்பப்பட்ட சில கேள்விகள் பொருத்தமற்றதாகவும் பத்திரிகை நெறிக்கு இணை இல்லாமலும் இருந்தது.

''உங்கள் கொலைகாரன் மகனைச் சந்தித்த பிறகு உங்கள் உணர்வுகள் என்ன?'' என ஒரு பெண் பத்திரிக்கையாளர் கத்தினார்.

''உங்கள் கணவர் பல அப்பாவி பாகிஸ்தானியர்களின் ரத்தத்துடன் ஹோலி விளையாடினார். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என மற்றொருவர் கத்தினார்.

அவர்களது வாகனம் வெளியுறத்துறை அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியேறியபோது, சில ஊடகத்தினர் ''பாகிஸ்தான் வாழ்க'' என கோஷம் எழுப்பினர்.

இந்த செயலுக்கான முதல் கண்டனம் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் இருந்து வந்தது. கோஷம் எழுப்பியவர்களை விமர்சித்த அவர்கள், இது ஊடக நெறிமுறைகளுக்கு எதிரானது என கூறினர்.

சிலர் சமூக ஊடகம் மூலம் கண்டனம் தெரிவித்தனர். இதன் மூலம், இது அனைத்து ஊடகத்தினரின் செயல் அல்ல, குறிப்பிட்ட சில நபர்களின் செயல் என உலக ஊடகத்தினர் அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தியாவில் நடந்ததும் பாகிஸ்தானில் நிகழ்ந்ததற்குச் சமமானது. இந்த செய்திக்காக குரல்கள் உயர்த்தப்பட்டன. இசை மற்றும் ஒலிகள் சேர்க்கப்பட்டன. பின்னணி குரல்களாலும், அலங்கார சொற்களாலும் காணொளிகள் மேம்படுத்தப்பட்டன. இந்த காணொளிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டன.

ஜாதவ் செய்தி இந்தியா மற்றும் பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்கள் இடையே மிகவும் வித்தியாசமான அரசியல் சூழலைக் கொண்டிருந்தது. ஜாதவ் ஒரு நாட்டின் ''ஹீரோ'' மற்றொரு நாட்டின் ''வில்லன்''.

''இரு நாடுகள் இடையே வெறுப்புணர்வை உருவாக்குவதில் ஊடகமும் ஒரு பகுதியாக இருப்பது வருத்தமான ஒன்று'' என பாகிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஷக்கீல் அஞ்சம் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்