வட கொரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற 2-ஆவது கப்பல் பறிமுதல்

படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் விவகாரத்தில் இரண்டாவது கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனாமாவிலிருந்து புறப்பட்ட கோட்டி என்ற இந்த கப்பலானது பியாங்டெக்கின் மேற்கு பகுதியிலுள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

600 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ரகசியமாக வட கொரிய கப்பலொன்றுக்கு பரிமாற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கப்பலை தென் கொரியா ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளது.

வட கொரியாவின் ஆயுதத் திட்டத்திற்கு பதிலடியாக ஐநா அதன் மீது சர்வதேச தடைகளை விதித்துள்ளது.

பெரும்பாலும் சீன மற்றும் மியான்மரை சேர்ந்த ஊழியர்களை கொண்ட இக்கப்பல் 5,100 டன் எண்ணெய்யை சேமிக்கும் திறன் கொண்டதென தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட லைட்ஹவுஸ் வின்மோர் என்ற கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தென் கொரியா அறிவித்தது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த கப்பல் தென் கொரியாவில் உள்ள யோசு துறைமுகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி வந்ததாகவும், நான்கு நாட்கள் கழித்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை எடுத்துக்கொண்டு தாய்வான் நோக்கிச் சென்றது எனவும் யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த கப்பல் தைவானுக்கு செல்வதற்கு பதிலாக அக்டோபர் 19ம் தேதியன்று, சர்வதேச கடல் பகுதியில், அதிலிருந்த எண்ணெய்யை ஒரு வட கொரிய கப்பல் மற்றும் மற்ற மூன்று கப்பல்களுக்கு பரிமாற்றம் செய்ததாக தென் கொரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி யோன்ஹப் செய்தி வெளியிட்டுள்ளது.

யோசு துறைமுகத்திற்கு நவம்பர் மாதம் திரும்பி வந்த அந்த கப்பலை பறிமுதல் செய்து தென் கொரியாவிலேயே வைத்திருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரியாவிற்கு சட்டவிரோத எண்ணெய்க் கப்பல்கள் அனுப்பப்படுவதற்கு சீனா அனுமதித்ததாக குற்றஞ்சாட்டினார்.

வட கொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படுமானால் வட கொரிய நெருக்கடிக்கு ஒரு "நட்புரீதியிலான தீர்வு" இருக்க முடியாது என்றும் ட்ரம்ப் கூறினார்.

இதற்கு பதிலடியாக, "வட கொரியா மீது சுமத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுவதற்கு சீன நிறுவனங்கள் அல்லது தனி நபர்களை சீனா அனுமதிக்கவில்லை" என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானமானது வட கொரியாவுக்கு செல்லும் எந்தவொரு பொருளையும் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுவதை தடை செய்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :