செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று முதல் வாட் வரி அமல்!

படத்தின் காப்புரிமை Getty Images

செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல்முறையாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இருநாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது.

ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் வருவாயை அதிகரிக்க அரசாங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

இந்த வரிவிதிப்பு முறை இன்று (ஜனவரி 1) முதல் இருநாடுகளிலும் அமலாகிறது.

வாட் வரி காரணமாக முதல் ஆண்டில், சுமார் 12 பில்லியன் திராம் (3.3 பில்லியன் டாலர்கள்) வருவாய் கிடைக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மதிப்பீடு செய்துள்ளது.

வருமானத்துக்கும் வரி விதிக்கப்படுமா?

பெட்ரோல், டீசல், உணவு, ஆடைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஹோட்டல் அறைகள் ஆகியவற்றுக்கு வாட் பொருந்தும்.

ஆனால், மருத்துவ சிகிச்சை, நிதி சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செளதி அரேபியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருவாய் எண்ணெய் தொழிலிலிருந்து கிடைக்கிறது. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அந்த வருவாய் என்பது தோராயமாக 80 சதவீதமாக உள்ளது.

அரசின் வருவாயை பெருக்க இருநாடுகளும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

ஆனால், வருமான வரியை அமல்படுத்தும் எந்தவொரு திட்டங்களும் இருநாடுகளிடமும் இல்லை.

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு 0 சதவீதம் வருமான வரியாக செலுத்துகின்றனர்.

வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் வாட் வரி விதிப்புமுறையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளன.

ஆனால், அதில் சில நாடுகள் 2019 வரை இதுகுறித்த திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்