இரான்: போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று இரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தெஹ்ரான் பல்கலைக்கழகத்திலும் வன்முறை பரவியுள்ளது

இதன்மூலம் இந்தப்போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22-ஐ எட்டியுள்ளது. காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கிகளை கைப்பற்ற முயன்ற போது ஆறு போராட்டக்காரர்கள் இறந்துள்ளனர்.

பதினோரு வயதாகும் ஒரு சிறுவன் மற்றும் போராட்டக்காரர் ஒருவர் 'புரட்சிப்படைகள்' என்று அழைக்கப்படும் இரான் அரசின் காவல் படை ஒன்றுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் கார் எரிப்பு சம்பவங்களும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் அதிகாரி ஒருவர் இறந்ததாகவும், சிலர் காயமுற்றதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இதனிடையே இந்தக் கலவரங்கள் குறித்து முறையாகக் கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, "இஸ்லாமியக் குடியரசில் (இரானில்) பிரச்சனைகளை உருவாக்க பணம், ஆயுதங்கள், அரசியல் மற்றும் உளவு உள்ளிட்ட பல கருவிகளை எதிரிகள் பயன்படுத்தியுள்ளனர்," என்று கூறியதாக அவரது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இரான் அதிபர் ஹசன் ரோஹானி போராட்டங்களை கைவிடுமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனாலும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

போராட்டகாரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்த அமெரிக்கா, இதனை, "தைரியமான எதிர்ப்பு" என்று கூறியிருந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இரான் அதிபர் ஹசன் ரோஹானி

கடந்த வியாழக்கிழமை இரானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மஷாத் நகரத்தில் இந்தப் போராட்டம் தொடங்கியது. முதலில் விலைவாசி உயர்வுக்கும், உழல்களுக்கும் எதிராக மட்டும் என்று எழுந்த இப்போராட்டம், இப்போது ஓட்டுமொத்தமாக அரசுக்கு எதிரான போராட்டமாக விரிவடைந்து இருக்கிறது.

பெரும் சர்ச்சைக்குள்ளான, 2009ஆம் ஆண்டு நடந்த, இரான் அதிபர் தேர்தலுக்கு பிறகு நடந்த போராட்டங்களில் இதுதான் மிகப் பெரியது.

தொடரும் வன்முறை

ஒரு டாக்ஸி எரிக்கப்பட்டதாக மெஹர் செய்தி நிறுவனம் கூறுகிறது. தெஹ்ரானின் எங்கிலெப் சதுக்கம் அருகே ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். அவர்கள் மீது தண்ணீரும் பீச்சி அடிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை EPA

மத்திய இரானின் இஸ்ஃபஹான் அருகே நஜஃபாபாத் அருகே போலீஸார் தாக்கப்பட்டனர் என்றும், அதில் ஒரு காவலர் உயிர் இழந்தார், மூவர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை கூறியதாக இரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

குவாடெரிஜான் நகரத்தில் காவல் நிலைய கட்டடத்தை கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயன்றபோது, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே நடந்த சண்டையில் காவல் நிலையத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

என்ன சொல்கிறார்இரான்அதிபர்?

போராட்டம் குறித்து இரான் அதிபர் ரோஹானி, "இது ஒன்றுமில்லை. போராட்டக்காரர்களுக்கு இது அரசை எதிர்க்க ஒரு வாய்ப்பு" என்று கூறி இருந்தார். அதேநேரம் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர், "அரசுக்கு எதிரான கோஷங்களில் ஈடுபவர்களையும், புரட்சியின் மகத்துவத்தை அவமரியாதை செய்பவர்களையும் இந்த அரசு கடுமையாக எதிர்கொள்ளும்" என்றார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானிய மக்கள் பல வருடங்களாக ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் உணவு மற்றும் சுதந்திரத்துக்கான பசியில் இருந்து வருகிறார்கள். மனித உரிமையுடன் சேர்த்து, இரானின் வளமும் கொள்ளையடிக்கப்படுகிறது." என்று ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர், " இது மாற்றத்திற்கான நேரம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ரோஹானி அமெரிக்காவைச் கடுமையாக சாடியிருந்தார். அமெரிக்காவின் அதிபரை, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இரான் நாட்டிற்கு எதிரானவர் என்று அவர் வருணித்து இருந்தார்.

அது போல, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், இரானில் நடந்து வரும் நிகழ்வுகளை தாங்கள் நெருக்கமாக கவனித்துவருவதாக கூறி உள்ளார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :