குளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது வடகொரியா

தென் கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

ஜனவரி 9ஆம் தேதியன்று நடைபெறும் இந்த சந்திப்பில், தென் கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், வடகொரிய வீரர்கள் கலந்து கொள்வதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள இந்த போட்டிகளுக்கு, தங்கள் நாட்டின் சார்பாக அணியை அனுப்புவது "மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக இருக்கும்" என வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

எல்லைப் பகுதியில் உள்ள பன்முன்ஜோம் என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லையில் மிகவும் பாதுகாக்கப்பட்ட ராணுவ மண்டலத்தில் உள்ள இந்த கிராமத்தில்தான் கொரியாக்கள் வரலாற்று ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை மேம்படுத்துவதில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்ற வடகொரியா, தொலைநகல் மூலம் அதனை உறுதிப்படுத்தியதாக தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்திப்பின் முடிவுகள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இது சர்வதேச அழுத்தத்தால் நடக்கும் பேச்சுவார்த்தை என்று கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ், இந்த நகர்வு கிம் நீட்டும் உண்மையான நேசக் கரமா இல்லை உறவும்-பிரிவும் கொள்ளும் முயற்சியா என்பது தெளிவாகவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த காலங்களில், செயல்முறையில் பேச்சுவார்த்தையில் நடத்திக்கொண்டு மோதலைத் தூண்டும் சம்பவங்களில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், தங்கள் நாடு தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்