வடகொரியா: தயார் நிலையில் குளிர்கால விளையாட்டுப் பூங்கா

அண்டை நாடான தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க அங்கு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில் புதிய குளிர்கால விளையாட்டுப் பூங்காவை நிர்மாணித்துள்ளதாக வட கொரியா கூறுகிறது.

படத்தின் காப்புரிமை ED JONES/AFP/Getty Images
Image caption மசிகிரியோங் பனிச்சறுக்குப் பூங்கா

"மக்களின் பேரார்வத்தை" பிரதிபலிக்கும் வகையில் காங்யீ-யில் குளிர்கால விளையாட்டுப் பூங்கா திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே கட்டிமுடிக்கப்பட்டதாக ரையுக்யாங் செய்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "தொழிலாளர்கள் மற்றும் உடல் வலிமை கொண்ட இளைஞர்கள்" பயனுள்ள வகையில் இது இருக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜோங்-உன்னின் உத்தரவின் பேரில் நாட்டில் வடக்கில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவின் கட்டுமானம் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது என்று கூறும் அரசு பத்திரிகை டிபிஆர்கே டுடே, தானாகவே பனியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதால், பனி பெய்யாத சமயத்திலும் இங்கு விளையாடலாம் என்று கூறுகிறது.

"கட்சியின் விருப்பமின்றி இத்தகைய அற்புதமான கலாசார ஓய்வு விடுதியை நிறுவுவது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கட்டுமானத் தலைவர் கிம் சியோங்-இல், அரிரங் மியரி இணையத்தளத்தில் கேட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியாவின் என்.கே. நியூஸ் நிறுவனம், "மசிகிரியோங் வேகத்தில்" இதற்கான வேலை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறது. நாட்டின் முதல் பனி தங்கும் விடுதி மசிகிரியோங்கில் கட்டப்பட்டபோது, வெறும் அடிப்படை கருவிகளைக் கொண்டு அதிவேகத்தில் கட்டியதை நினைவுகூரும் வகையில் "மசிரியோங் வேகம்" என்று கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை DPRK Today
Image caption தற்போது காங்கீ ரிசார்ட் கட்டப்பட்டிருக்கும் இடத்தின் ஆறு மாதங்களுக்கு முந்தைய தோற்றம் இது என்று வட கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

முக்கியத் திட்டம்

ஐ. நா. விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் நாடு முக்கியத் திட்டம் ஒன்றை நல்ல முறையில் செயல்படுத்தியிருப்பதை வெளியுலகத்திற்கு காட்டும் முயற்சி இது.

வடகொரியா முதல் குளிர்கால விளையாட்டுப் பூங்காவை கட்டும்போது ஐ.நாவின் தடைகளால், சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு பனிச்சறுக்கு லிஃப்ட்டை இறக்குமதி செய்ய முடியாமல் போனது வடகொரியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த பின்னடைவை "கடுமையான மனித உரிமை மீறல்" என்று அழைத்த வடகொரியா, வேறு வழியில் பனிச்சறுக்கு லிஃப்ட்டை பெற்றது, மேலும் அதிபர் கிம் ஜோங்-உன் அங்கு ஆய்வு செய்ய வருகை தந்தபோது சவாரி செய்த புகைப்படம் வெளியிடப்பட்டது.

தற்போது காங்கீ-யில் அமைக்கப்பட்டுள்ள பனி விளையாட்டு சரிவுகளின் கட்டுமானத்திற்கு முன்னதாகவே உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுயமாகவே ஸ்கை லிப்ட்டை வடிவமைத்ததாக வடகொரியா கூறுகிறது.

படத்தின் காப்புரிமை KCNA
Image caption 2013இல் மஸ்கிகிரியோங்கில் பனிசறுக்கு விளையாடும் கிம் ஜோங்-உன்

ஒலிம்பிக் நம்பிக்கை

தென் கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பான உயர்நிலை பேச்சுவார்த்தைக்கான அழைப்பை வடகொரியா ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்த சாத்தியங்களை பரஸ்பரம் கலந்தாலோசிப்பதற்காக தென் கொரியாவுடனான ஹாட்லைன் தொலைபேசி வசதியை மீண்டும் வட கொரியா உயிர்ப்பித்துள்ளது. நேரடியான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும்.

ஒருங்கிணைந்த கொரிய அணியாக போட்டியிடலாம் என்று கடந்த ஆண்டு தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் விடுத்த அழைப்பை வட கொரியா நிராகரித்தது; மேலும் 2013-இல் சில பனிசறுக்கு விளையாட்டுகளை பியோங்யாங்கில் நடத்தலாம் என்ற வடகொரியாவின் பரிந்துரையை சியோல் நிராகரித்தது.

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையில் 1953இல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோதிலும், அதிகாரபூர்வமாக இருதரப்பும் போரில் ஈடுபட்ட நாடுகளாகவே உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :