சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்த அந்நாட்டு குர்து போராளிகள்: துருக்கியை எதிர்கொள்ள

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய முக்கிய நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக 'உலகப் பார்வை' பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அந்நாட்டுப் போராளிகள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆஃப்ரின் பகுதியில் இருந்து சிரியாவின் குர்துப் படையை வெளியேற்ற முயல்கிறது துருக்கி.

சிரியாவின் ஆஃப்ரின் பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்துப் போராளிகள் மீது துருக்கி தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்நிலையில் துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக குர்துப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் எல்லையை ஒட்டி இருக்கிறது ஆஃப்ரின். இப்பகுதியில் தற்போது சிரியாவின் அரசுப் படைகள் ஏதுமில்லை. தற்போது போராளிகளும், அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தால் துருக்கியை எதிர்கொள்ள ஆஃப்ரின் பகுதிக்கு சிரியாவின் அரசுப் படைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் அரசுப் படையினர் ஆஃப்ரின் பகுதிக்குள் வருவர் என்றும், எல்லைப் பகுதியை ஒட்டி சில நிலைகளை அவர்கள் அமைப்பார்கள் என்றும் குர்துப் படை அதிகாரி பார்தன் ஜியா குர்த் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் போலந்து தூதரக கேட்டில் 'ஸ்வஸ்திக்'

படத்தின் காப்புரிமை Reuters
Image caption போலந்து தூதரகக் கதவில் ஸ்வஸ்திக் சின்னம்.

ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சியில் பல லட்சக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட ஹாலோகாஸ்ட் எனப்படும் இனப்படுகொலை நிகழ்வுக்கு போலந்தை பொறுப்பாக்கிப் பேசுவதற்கு எதிராக போலந்து சமீபத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்துக்கு யூதர்களின் நாடான இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது.

இதையொட்டி இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில், போலந்து பிரதமர் மத்தேயூஷ் மொராவியட்ஸ்கி யூத இனப்படுகொலைக்கான காரணகர்த்தாக்களில் யூதர்களும் இருப்பதைப் போலப் பொருள் தரும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கண்டித்திருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள போலந்து தூதரகத்தின் வாயிற் கதவின் மீது யூத இனப்படுகொலைக்கு காரணமான நாஜிக்களின் ஸ்வஸ்திக் சின்னம் யாரோ சில விஷமிகளால் மார்க்கர் பேனாவைக் கொண்டு வரையப்பட்டிருந்தது. இஸ்ரேல் போலீசார் இது குறித்து விசாரணை தொடக்கியுள்ளனர். எனினும் இதுவரை யாரும் இச் செயலுக்கு பொறுப்பேற்கவில்லை.

ரஷ்யாவில் தேவாலயம் செல்வோர் மீது துப்பாக்கிச் சூடு- ஐவர் பலி

ரஷ்யாவில் தேவாலயம் செல்வோரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். தேசியப் பாதுகாவலர் ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்திரமற்ற நிலை நிலவும் ரஷ்யாவின் தேஜஸ்தான் குடியரசில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிஸ்லியார் என்ற நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மாலை நேரப் பிரார்த்தனை முடிந்து வெளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேட்டைத் துப்பாக்கியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் தொடுத்த நபர் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அவரது பெயர் கலில் கலிலோவ் (22) என்பது கண்டறியப்பட்டது. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்கப் பள்ளித்தாக்குதலில் பிழைத்தவர்கள் பேரணித் திட்டம்

Image caption தாக்குதலை எதிர்த்து நடந்த ஒரு போராட்டத்தில்...

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பள்ளியொன்றின் மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் துப்பாக்கிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு கோரி தலைநகர் வாஷிங்டனில் பேரணி ஒன்றை நடந்தத் திட்டமிட்டுள்ளனர்.

துப்பாக்கிகள் தொடர்பாக நடந்து வரும் தேசிய விவாதத்தில் புதன்கிழமை நடந்த தாக்குதல் ஒரு திருப்புமுனையை உருவாக்கவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக மாணவர்களை இந்தப் பேரணிக்காக ஒருங்கிணைப்பவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கு உள்ள மக்களின் உரிமையை தாம் பறிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு கூறியிருந்தார். இந் நிலையில் ஃப்ளோரிடா தாக்குதலை எதிர்த்து சனிக்கிழமை நடந்த ஒரு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அமெரிக்க அதிபரையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குறிப்பிட்டு, "வெட்கக்கேடு" என்று பொருள் தரும் 'ஷேம் ஆன் யூ' என்ற முழக்கத்தை எழுப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: