சிரியா விவகாரம்: ரஷ்யா, சீனா மீது மேற்குலக அணிகள் பாய்ச்சல்

சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தன படத்தின் காப்புரிமை AFP
Image caption சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தன

ஜனநாயகமான சிரியாவை விரும்புபவர்கள் அதிபர் பஷார் அஸ்ஸத்துக்கு எதிராக ஒன்று திரளவேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது.

சிரியாவில் ஜனநாயக மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக முயன்றுவரும் எதிரணியினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்டுவதற்கு ஐநாவுக்கு வெளியே அமெரிக்கா தயாராகிறதா என்ற கேள்வியை இந்த அழைப்பு ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவுக்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீ்ர்மானத்தில் ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகரத்தைப் பிரயோகித்துள்ளமை மேற்குலகிலும் அரபுலகிலும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.

'பனிப்போர் சித்தாந்தம்'

படத்தின் காப்புரிமை q
Image caption ஹில்லரி கிளிண்டன்

இதேவேளை சிரியாவில் நடந்துவரும் கொலைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் தார்மீகப் பொறுப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று நோபல் அமைதிப் பரிசு வென்ற யேமனைச் சேர்ந்த தவக் உல் கர்மன் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் சிரிய நாட்டு தூதுவர்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

துனிஷிய பிரதமர் ஹமாதி ஜெபாலியும் இதேவிதமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைகளின் மத்தியில் இதுதான் ‘எம்மால் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார்.

சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டன என்பதுதான் அவரது கருத்து.

இதே தொனியில்தான் துருக்கி நாட்டு வெளியுறவு அமைச்சரும் பேசியிருக்கிறார்.

இன்னும் அந்தப் பழைய பனிப்போர் கால சித்தாந்தத்தையே இந்த நாடுகள் எதற்கெடுத்தாலும் கையில் எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கிலும் இதேவிதமான புதிய பிராந்திய பனிப்போரொன்று தொடங்கிவிடுமென்ற அச்சம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சிரியா, இராக் லெபனான் போன்ற நாடுகள் புதிய மத உட்பிரிவு ரீதியான மோதல்களுக்கு அடிப்படையாக அமைந்துவிடலாம் என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார்.