ரஷ்யாவில் தேர்தலை ஒட்டி புடின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

புடின் எதிர்ப்பு ஊர்வலத்தில் பனி பொம்மைகளோடு புடின் படம் படத்தின் காப்புரிமை Reuters
Image caption புடின் எதிர்ப்பு ஊர்வலத்தில் பனி பொம்மைகளோடு புடின் படம்

ரஷ்யாவில் மார்ச் நான்காம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தற்போது பிரதமராகவுள்ள முன்னாள் அதிபர் விளாடிமிர் புடினே மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருத்து கணிப்புகள் காட்டினாலும், புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்கோவில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.

ரஷ்யாவில் புரையோடிப்போயுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் இந்த ஆர்ப்பாட்டங்களின் முக்கியக் கருப்பொருளாய் அமைந்திருக்கின்றன.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் வெள்ளை பலூன்களையும் வெள்ளைத் துண்டுகளையும் ஏந்தியிருந்தனர்.

புடினுக்கு எதிரான அமைதிகரமான ஆர்ப்பாட்டங்களின் சின்னமாகவே இந்த வெள்ளைத் துண்டுகளும் பலூன்களும் மாறிவிட்டுள்ளன எனலாம்.

மக்கள் ஏந்தி நின்ற பலூன்கள் பெரும்பான்மையானவற்றில் "ரஷ்யாவில் வேலையிலிருந்து ஓய்வுபெறுவதற்குரிய வயது 60. எஎற்கனவே புடினுக்கு 59 வயது ஆகிவிட்டது. ஆகவே அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும்." என்று எழுதப்பட்டிருந்தன.

புடினின் யதேச்சதிகார பாணியும், அவரது ஆட்சியில் ஊழல் புரையோடிப்போயுள்ளதுமே நடுத்தர வர்க்கத்து மாஸ்கோவாசிகள் இந்த அளவுக்கு புடினை எதிர்க்க காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் நடுத்தர வர்க்கத்து மாஸ்கோவாசிகள் ஒரு தீய சக்தியாகவே நினைக்கும் அதிபர் புடின் இனி அரசியல் களத்திலிருந்து மறைந்து போவாரா?

போக மாட்டார், அவரே மீண்டும் அதிபராக வருவார் என்றுதான் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

புடின் தான் இந்த முறையும் தேர்தலில் வெல்வார் என்று அவரை கடுமையாக எதிர்ப்பவர்களேகூட ஒப்புக்கொள்கின்றனர்.

பெரு நகரங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்காமல் போனாலும் கிராமங்கள், சிற்றூர்கள், தொலைதூரத்து பிரதேசங்களில் எல்லாம் புடினே இன்றளவும் பிரபலமாக இருந்து வருகிறார்.