'மலேஷியாவில் பணிப்பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர்'

மலேஷியா- இந்தோனேஷியா வரைபடம்
Image caption மலேஷியா- இந்தோனேஷியா வரைபடம்

மலேஷியாவில் மூத்த அரச அதிகாரி ஒருவரால் வீட்டுப் பணிப்பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அங்குள்ள

இந்தோ​னேஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய வீட்டுப்பணிப் பெண்களை பாதுகாப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இரண்டு நாடுகளும் கைச்சாத்திட்ட பின்னர் வெளிவந்துள்ள முதலாவது குற்றச்சாட்டு இது.

மலேஷியாவில் வீட்டுப் பணிப்பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக தொடர்ச்சியாக வந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து 2009ம் ஆண்டில் இந்தோனேஷிய அரசு, அதன் பிரஜைகள் யாரும் மலேஷியாவில் வீட்டுப்பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்திருந்தது.

இப்போது இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதத்திலிருந்து இந்தோனேஷியப் பணிப்பெண்கள் மலேஷியா வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன அடிமை முறை

ஆனால் தற்போது வந்திருக்கின்ற குற்றச்சாட்டின்படி, மலேஷியாவின் மூத்த அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் தம்மை ‘நவீனகால அடிமைகளாக’ நடத்திவந்ததாக வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் முறையிட்டிருக்கிறார்கள்.

தமது சம்பளப் பணம் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை என்றும் ராத்தி்ரி நேரத்தில் உடலைப் பிடித்து மசாஜ் செய்வது போன்ற சிரமமான காரியங்களை செய்யச் சொல்கிறார்கள் என்றும் இந்தப் பணிப்பெண்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோலாலம்பூரில் இருக்கின்ற இந்தோனேஷியத் தூதரகம் குறித்த மலேஷிய உயர் அதிகாரியின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் இந்தோனேஷியப் பணிப்பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது பரவலாகவே இடம்பெற்றுவருகின்றது என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பிரச்சனையில் மலேஷிய அரசாங்கத்திடமிருந்து உறுதியான நடவடிக்கையொன்று அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இல்லாவிட்டால் இந்தோனேஷிய அரசாங்கம் மீண்டும் தடையை அறிவிக்கவேண்டியேற்படும் என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிற்சட்டங்களில் இவ்வாறான வீட்டுப் பணிப்பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமையால், அவர்களே மிக இலகுவில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

மலேஷியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் எட்டப்பட்ட அண்மைய உடன்பாடும் கூட இந்தப் பிரச்சனையை தீர்க்கவில்லை.

மலேஷியாவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களின் குழந்தைகளையும் முதியவர்களையும் பராமரிப்பதற்கு வீட்டுப் பணிப்பெண்களையே நம்பியிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.