பிரான்ஸில் அளவுக்கதிகமாக வெளிநாட்டினர்: சர்கோஸி

தொலைக்காட்சி விவாதத்தில் அதிபர் சர்கோஸி படத்தின் காப்புரிமை AFP
Image caption தொலைக்காட்சி விவாதத்தில் அதிபர் சர்கோஸி

பிரான்ஸில் அளவுக்கதிகமான வெளிநாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் அதிபர் நிக்கோலா சர்கோஸி கூறியுள்ளார்.

ஏப்ரல் 22ஆம் தேதி பிரான்ஸில் அதிபர் தேர்தல். தற்போது பிரச்சாரங்கள் அனல் பறக்க நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மக்களின் ஆதரவைக் கோரி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தோன்றிய சர்கோஸி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்த்துப் போட்டியிடும் சோஷலிஸ கட்சி வேட்பாளர் பிரான்ஸுவா ஹொல்லாந்தைக் காட்டிலும் சர்கோஸிக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கருத்து கணிப்புகள் காட்டுகின்றன.

தவிர மரி லெ பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணிக் கட்சியிடமிருந்து வலது சார்புடைய வாக்காளர்களை தன் பக்கம் இழுக்க வேண்டிய ஒரு அவசியமும் தற்போது சர்கோஸிக்கு உள்ளது.

பிரான்ஸுக்குள் குடியேறும் வெளினாட்டினரை பிரஞ்சு சமூகத்தில் ஒன்றிணைப்பதற்காக இருந்துவருகின்ற கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் பலனளிக்காமல் மென்மேலும் மோசமாகிக்கொண்டிருப்பதாகவும் பிரஞ்சு அதிபர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடக்கக்கூடிய தேர்தலில் தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்ஸுக்குள் குடியேறுகின்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கையை தற்போதைய அளவுகளில் இருந்து பாதியாய்க் குறைக்க தான் திட்டங்கள் வைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

பிரான்ஸுக்குள் பத்து ஆண்டுகளுக்கும் அதிக காலம் வசித்துவிட்ட குடியேறிகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற உதவித்தொகைகள் குறைக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் சர்கோஸி தெரிவித்துள்ளார்.

சர்கோஸியும் சர்ச்சைகளும்

சர்கோஸியே, ஹங்கேரியில் இருந்து பிரான்ஸுக்குள் குடியேறியவர் ஒருவரின் மகன்தான் என்றாலும், இனம், வெளிநாட்டினர் குடியேற்றம் போன்ற விஷயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்து வந்துள்ள கருத்துகள் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன.

பிரான்ஸ் மக்களிடையே பெரும் அபிப்பிராய பேதங்களை தோற்றுவித்த விஷயங்களாக இவை அமைந்திருக்கின்றன.

அவர் தனது முதல் பதவிக்காலத்தின்போதும் கடுமையான புதிய குடிவரவு விதிகளை அறிமுகப்படுத்திய்ருந்தார்.

ரோமா இனத்து ஜிப்ஸிக்களை பிரான்ஸிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவது என்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கையும் இதில் அடங்கும்.

ஹலால் இறைச்சி விவகாரம்

இதனிடையே, உணவுக்காக விலங்குகளை அறுக்கும்போது மதரீதியில் அதனைச் செய்வதென்பது காலாவதியாகவேண்டிய ஒரு பழைய வழக்கம் என்று குறிப்புணர்த்துவதுபோல பிரஞ்சுப் பிரதமர் பிரான்சுவா ஃபிய்யோன் பேசியிருப்பது பிரான்ஸின் முஸ்லிம் மற்றும் யூதக் குழுக்களை சலனமடையச் செய்திருக்ககிறது.

பாரீஸ் வட்டகையில் பெரும்பான்மையான கசாப்புக் கடைகள் ஹலால் இறைச்சியைத்தான் விற்கிறார்கள் என்று தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்று தெரிவித்ததிலிருந்து அந்நாட்டில் இந்த சர்ச்சை ஆரம்பமானது.