கடாபியின் தலைமை புலனாய்வு அதிகாரி கைது

செனுஸ்ஸி மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption செனுஸ்ஸி மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது

லிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபியின் தலைமை புலனாய்வு அதிகாரி மொரிட்டானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவேக்சூட் விமான நிலையத்தில் அப்துல்லா அல்-செனுஸ்ஸி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

63 வயதான செனுஸ்ஸி கர்ணல் கடாபியின் மைத்துனராவார்: கடாபியின் மிக நம்பிக்கைக்குரிய சகாவாகவும் அவர் இருந்துள்ளார்.

லிபியாவில் பல மாதங்கள் நீடித்த மோதல்கள் மற்றும் கிளர்ச்சியின்போது பதவியிலிருந்து விரட்டப்பட்ட அதிபர் கடாபி பின்னர் கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இதன்போது லிபியாவிலிருந்து தப்பிச் சென்றிருந்த அல்- செனுஸ்ஸி மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் ஆஜராக வேண்டுமென கோரப்பட்டது.

மொரோக்கோவிலிருந்து போலியான மாலி நாட்டு கடவுச் சீட்டுடன் மொரிட்டானியா விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்தத் தகவலை லிபிய அதிகாரிகளால் உறுதிசெய்ய முடியவில்லை.

மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்

கடாபி ஆட்சியைச் சேர்ந்தவர்களில் இன்னும் பிடிபடாது எஞ்சியிருந்த முக்கிய நபர்களில் அப்துல்லா அல்-செனுஸ்ஸியும் ஒருவர் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பலரை நேரடியாகவே தாக்கி துன்புறுத்துவதில் இவர் 'கைதேர்ந்தவராக' இருந்துள்ளார் என்று லிபியா, அரபு மற்றும் மேற்குலக நாடுகளிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

1980கள், 90களில் கடாபி ஆட்சிக்கு எதிரானவர்களை ஒழித்துக்கட்டியதிலும் 1996 இல் திரிப்போலியில் உள்ள அபு சலீம் சிறைச்சாலையில் 1200 அரசியல் கைதிகளை கொன்றொழித்த சம்பவத்திலும் இவருக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாக கருதப்படுகின்றது.

லிபியாவின் கிழக்கே பெங்காசி நகரில் 2011 இன் முற்பகுதியில் தொடங்கிய கிளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகளில் செனுஸ்ஸி முக்கிய பங்கு வகித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் இவர் கைது செய்யப்பட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்று பல தகவல்கள் வெளியாகியிருந்தன: ஆனால் அதற்குப் பின்னர் அந்தத் தகவல்கள் தவறானவை என்று கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.