சிரியாவில் குண்டுத் தாக்குதல்கள்: பலர் பலி

இவை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று அரச ஊடகம் கூறியுள்ளது படத்தின் காப்புரிமை AFP
Image caption இவை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று அரச ஊடகம் கூறியுள்ளது

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் நடந்துள்ள இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் பொதுமக்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மொத்தமாக 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு மற்றும் காவல்துறை கட்டடங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களை 'பயங்கரவாதத் தாக்குதல்கள்' என அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் மூலமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் கூறுகின்றன.

சிரியாவில் ஊடகவியலாளர்களின் பணிகள் முடக்கப்பட்டுள்ளதால் சம்பவங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த சில மாதங்களில் டமஸ்கஸ்ஸிலும் இரண்டாவது பெரிய நகரான அலப்போவிலும் நடந்த தாக்குதல்களிலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனால் இவ்வாறான சில சம்பவங்களின் பின்னணியில் அரசே இருப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அதிபர் அல் அஸ்ஸத்துக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கி ஓர் ஆண்டு கடந்துள்ள நிலையில், அரச படைகளின் தாக்குதல்களில் சுமார் 8,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.