'சென் உறவினர்களை இலக்கு வைக்கிறது சீனா'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 ஏப்ரல், 2012 - 11:21 ஜிஎம்டி
சென் குவான்செங் (இடது), ஹூ ஜியா(வலது)

ஹூ ஜி ஆ(வலது பக்கம் இருப்பவர்) தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்

வீட்டுக்காவலில் இருந்து கடந்த வாரம் தப்பிச்சென்ற, பார்வையற்ற சீனச் செயற்பாட்டாளர் சென் குவான்செங்கின் ஊறவினர்களையும் அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களையும் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென் தப்பிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கடந்த சில தினங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல்போயிருக்கிறார்கள்.

சென் உடன் நெருக்கமான இன்னொரு செயற்பாட்டாளர் ஹூ ஜி ஆ தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.

சென் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தப்படுகின்ற விதம் தொடர்பாக அமெரிக்க மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றன.

சென் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னர் கோரிக்கை விடுத்திருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலரி கிளிண்டன், ஏற்கனவே திட்டமிட்டிருந்த சந்திப்பொன்றுக்காக இந்த வாரம் சீனா செல்கிறார்.

இப்போது சென் விவகாரமே இந்த சந்திப்பில் முக்கிய இடம்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த விவகாரம் இரண்டு தரப்பிலுமே பெரும் இழுபறியாக அமையும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சென் சீனாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 4 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சென், அதன்பின்னர் கடந்த 2010 இல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

சீனாவில் உள்ளூராட்சி அதிகாரிகள் ஒரு-குழந்தை கொள்கையைக் காட்டி கருக்கலைப்புகளின் போது எவ்வாறு அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை சென் வெளியுலகுக்குக் காட்டியிருந்தார்.

இப்போது சென் தப்பிச் சென்றுள்ள பின்னணியில், அவரது மனைவியும் 6 வயது குழந்தையும் வீட்டுக்காவலிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.