புதிய அரசாங்கம் அமைக்கும் பணியில் முர்ஸி

வெற்றி உரையாற்றும் அதிபர் மொஹமட் முர்ஸி படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption வெற்றி உரையாற்றும் அதிபர் மொஹமட் முர்ஸி

எகிப்தில் முதற்தடவையாக ஜனநாயக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் மொஹமட் முர்ஸி புதிய அரசாங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

முபாரக் காலத்தில் பிரதமராக இருந்த அஹ்மட் ஷாபிக்கை தோற்கடித்துள்ள முஸ்லிம் சகோதத்துவக் கட்சி வேட்பாளர் முர்ஸியை உலகத் தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

வரும் 30-ம் திகதியன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முர்ஸி ஆட்சியதிகாரத்தில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துவார் என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

அதிபருக்குரிய பல அதிகாரங்களை இப்போது தன்வசம் வைத்திருக்கின்ற ஆளும் இராணுவக் கவுன்சில் நாடாளுமன்றத்தையும் கலைத்துவிட்டது.

60 வயதான முர்ஸி,தனது வெற்றிச் செய்தியில், தேசிய ஒற்றுமையை பலப்படுத்துமாறும் நாடு முழுமைக்கும் தலைமைத்துவம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

கடந்த 16-17ம் திகதிகளில் நடந்த இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வேட்பாளர் முர்ஸி, 51.73 % வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி, சிவில் நிர்வாகமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபடவுள்ள முர்ஸி, தன் விருப்பப்படி ஒருவரை பிரதமராக நியமிப்பார்.

தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருந்த முஸ்லிம் சகோரத்துவக் கட்சி ஆதரவாளர்கள் வெற்றிச் செய்தியை கேட்டு ஆரவாரித்து மகிழ்ச்சியைக் கொண்டாடியதுடன் இராணுவ ஆட்சி ஒழிக என்றும் கோஷமிட்டனர்.

எகிப்தில் தற்போது, இயங்கும் நிலையிலான நாடாளுமன்றமோ நிலையான அரசியலமைப்போ இன்னும் உறுதியாகதுள்ள பட்சத்தில், புதிய அதிபருக்கு என்ன என்ன அதிகாரங்கள், எந்தளவுக்கு இருக்கின்றன என்பது தெளிவில்லாமல் தான் இருக்கிறது.