சிரியாவின் எதிர்த்தரப்பு கூட்டணியில் தொடரும் பிளவுகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஜூலை, 2012 - 13:42 ஜிஎம்டி
அசாத்தின் மீதான எதிர்ப்பு அதிகரிக்கிறது

அசாத்தின் மீதான எதிர்ப்பு அதிகரிக்கிறது

சிரியாவின் அரசாங்கப் படைகளுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் உருவான கடுமையான மோதல்கள் தலைநகர் டமாஸ்கஸில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சிரியாவின் பல எல்லை நிலைகளை கிளர்ச்சிப்படைகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பலரால் கூறப்படுவதுபோல எதிர்த்தரப்புப் படைகள் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கின்ற போதிலும் அவர்களிடையே ஒரு ஒற்றுமையான முன்னெடுப்பை இன்னமும் காணமுடியவில்லை.

அதிபர் அசாத்தின் நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள், இந்த வார குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதால், சிரியாவின் அரசாங்கம் பெருத்த பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

சிரியாவுக்கு வெளியே இருக்கும் அசாத்தின் எதிரிகளுக்கு இது நல்ல ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.

ஆனால், வன்செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், எதிர்த்தரப்பினர் மத்தியில் பிளவுகள் இன்னமும் ஆழமாகத்தான் காணப்படுகின்றன.

அசாத்தின் அரசாங்கத்தை எவ்வாறு வீழ்த்துவது மற்றும் அசாத்துக்குப் பின்பான சிரியாவுக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து அவர்கள் மத்தியில் உடன்பாடு எதுவும் இன்னமும் ஏற்படவில்லை.

இந்த எதிர்த்தரப்பு மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதில் பல கொள்கைகளை, நோக்கங்களைக் கொண்ட பல அமைப்புக்கள் இணைந்து காணப்படுகின்றன. ''பாத்'' கட்சியால் கடந்த 40 வருடங்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பல அரசியல் அமைப்புக்கள், மதக்கட்சிகள், இனக்குழுக்கள், சில பழைய குடும்பங்கள், பல பழங்குடியினங்கள் இதில் இணைந்துள்ளன.

நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் பல குழுக்கள், மாற்றுக் கருத்தாளர்கள், அடிமட்டச் செயற்பாட்டாளர்கள், இராணுவ கிளர்ச்சியாளர்கள் இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி, சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

இதில் இருக்கும் முக்கிய மூன்று எதிர்க்கட்சிகளை இங்கு நாம் குறிப்பிடலாம்.

சிரியாவின் தேசியக் கவுன்சில் என்பது இது சிரியாவுக்கு வெளியே செயற்படுகிறது. சிரியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு என்பது சிரியாவுக்கு உள்ளே செயற்படுகிறது. இவற்றைவிட சிரியாவின் சுதந்திர இராணுவம் என்ற பிரிவும் இருக்கிறது. இது ஒன்றுதான் இந்த மூன்று குழுக்களில் இருக்கின்ற ஒரேயொரு ஆயுதக்குழுவாகும். டமாஸ்கசில் நடந்த குண்டுத்தாக்குதலுக்கும் அதுதான் உடனடியாக பொறுப்புக் கோரியிருந்தது.

அசாத் அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் இது என்று அந்த இராணுவக்குழுவின் தலைவரான றியாத் அல் அசாத் கூறியுள்ளார்.

அரசியல் தளத்திலும், சர்வதேச சமூகத்துடனான இராஜதந்திர முயற்சிகளிலும் சிரியாவின் தேசியக் கவுன்ஸில் முன்னணியில் திகழ்கிறது.

சிரியாவின் மக்களின் பிரதிநிதிகளாக இந்த அமைப்பு அரபு லீக்காலும் மேற்குலகாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேசியக் கவுன்ஸிலில் தற்போதைய தலைவரான குர்து இனத்தைச் சேர்ந்த அப்தல் பசட் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார். இந்த கவுன்ஸிலில் சிரியாவின் சுனி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது. இருப்பினும் அதனை ஒரு ஒருமைப்பாட்டு இயக்கமாக அது காண்பிக்க முனைகிறது.

கொஞ்சம் இடதுசாரி போக்குடைய எதிர்க்கட்சி குழுவான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் சிரியாவுக்கு உள்ளே மாத்திரமே இன்னமும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

எந்தவகையான வெளிநாட்டு இராணுவ தலையீட்டையும் இந்த அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.

கடந்த 16 மாதகால சிரியாவின் போராட்டத்தில் இந்த மூன்று அமைப்புக்களுமே தமது முத்திரையை தனித்தனியாகப் பதித்திருந்தன.

ஆனால் ஒரு அதிகார சமநிலையை ஏற்படுத்துவதற்கு இவர்கள் இன்னமும் கடுமையாக இணைந்து செயற்பட்டாக வேண்டும்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.