தொழிற்கட்சி மாநாடு: பிரிட்டன் வங்கிகளுக்கு மிலிபாண்ட் எச்சரிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2012 - 13:26 ஜிஎம்டி
தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட்

தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட்

பிரிட்டனில் உள்ள வங்கிகள் அவற்றின் வழமையான வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வங்கியின் முதலீட்டுத் துறையிலிருந்து தனியாக பிரிக்காவிட்டால், எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் வங்கித்துறையை தனித்தனியாக 'கூறுபோட' வேண்டியேற்படும் என்று தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் எச்சரித்துள்ளார்.

வங்கிகள் அவற்றின் 'பிரித்தானிய பாரம்பரியத்தை' நோக்கித் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ள எட் மிலிபாண்ட், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக உழைக்க வேண்டுமே தவிர சர்வதேச சந்தைகளுக்காக அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலீட்டு வங்கித்துறையிலிருந்து சாதாரண வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை தனித்து வேறுபடுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட திட்டத்தை அரசாங்கம் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் வங்கித்துறையில் தீர்க்கமான சீர்திருத்தங்களை கொண்டுவரும் பணிகள் நடந்துவருவதாக திறைசேரி கூறுகிறது.

உலக நிதிநெருக்கடியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் பிரிட்டனில் முன்வைக்கப்பட்ட விக்கர்ஸ் ஆய்வு அறிக்கையின்படி, வழமையான சாதாரண வாடிக்கையாளர்களுக்கான வங்கிகளை, ஆபத்தான முதலீட்டு வங்கித்துறையிலிருந்து பிரித்து, அந்த வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தில் தங்கியிருப்பதை தடுக்கவேண்டும் என்று பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

சேர் ஜோன் விக்கர்ஸ் குழுவினர் முன்வைத்த எல்லா பரிந்துரைகளையுமே 2019-ம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்துவதாக பிரிட்டனை ஆளும் கூட்டணி அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது.

பிரிட்டன் வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்து சர்வதேச சந்தையில் சூதாடுவதாக மிலிபாண்ட் குற்றஞ்சாட்டுகிறார்

பிரிட்டன் வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்து சர்வதேச சந்தையில் 'சூதாடுவதாக' மிலிபாண்ட் குற்றஞ்சாட்டுகிறார்

ஆனால், அடுத்து 2015-ம் ஆண்டில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், அந்தக் கட்டத்தில் வங்கித்துறைக்கான சீர்திருத்தங்கள் நடைமுறையில் இருக்காவிட்டால், தாமே அதற்கான சட்டத்திருத்தங்களை கொண்டுவரவுள்ளதாக தொழிற்கட்சித் தலைவர் மிலிபாண்ட் தெரிவித்தார்.

'வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்துக்கொண்டு சர்வதேச சந்தையில் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சாதாரண வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றால் அங்கு தனக்காக அந்த வங்கி சேவையாற்றுகிறது என்பதை அவர் உணரவேண்டும்' என்று பிபிசிக்கு அளித்த செவ்வியில் எட் மிலிபாண்ட் தெரிவித்தார்.

'வங்கிகள் தாங்களாக இந்தப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளாவிட்டால் நாங்கள் ஆட்சியமைத்தவுடன் பிரிட்டனின் பழைய வங்கிப் பாரம்பரியத்தை நோக்கி வங்கித்துறையை கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம், வங்கிகளை தனித்தனியாக பிரித்துவிடுவோம்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'பிரிட்டனை மீளக்கட்டியெழுப்புதல்' என்ற தொனிப்பொருளில் தொழிற்கட்சியின் மாநாடு தற்போது மான்செஸ்டரில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.