அபு ஹம்ஸா அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 அக்டோபர், 2012 - 11:02 ஜிஎம்டி
அபு ஹம்ஸா மீதான பயங்கரவாத விசாரணைகள் முடிய 3 ஆண்டுகள் எடுக்கலாம்

அபு ஹம்ஸா மீதான பயங்கரவாத விசாரணைகள் முடிய 3 ஆண்டுகள் எடுக்கலாம்

கடும்போக்கு முஸ்லிம் மதபோதகரான அபு ஹம்ஸா நியூயோர்க்கிலுள்ள நீதிமன்றமொன்றில் பயங்கரவாத குற்ற விசாரணைகளுக்காக ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அபு ஹம்ஸா மற்றும் ஏனைய 4 பேரின் இறுதிநேர மேன்முறையீடுகளை லண்டன் மேல்நீதிமன்றம் ஏற்க மறுத்து சில மணிநேரத்தில் இரண்டு விமானங்களில் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜிகாத்-ஆதரவு இணையதளமொன்றை நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர்களுக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவுள்ளன.

சந்தேகநபர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை பிரிட்டன் துரிதப்படுத்தியிருந்த நிலையில், தமது உடல்நிலைக் காரணங்களை முன்வைத்து தம்மை அமெரிக்காவுக்கு அனுப்பக்கூடாது என்று அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர்.

ஆனால் அபு ஹம்ஸா, அஹ்மட்,அஷான்,அதல அப்துல் பாரி மற்றும் காலித் அல் ஃபவ்வாஸ் ஆகிய ஐந்துபேரும் பிரிட்டனில் தான் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய காரணங்களை முன்வைக்கவில்லை என்று லண்டன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பிரிட்டனில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நீடித்த நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் தீர்ப்புகள் ஐந்து பேரையும் அமெரிக்காவுக்கு அனுப்புவது சரி என்று உத்தரவிட்டிருந்த நிலையில், இறுதியாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பையே ஆமோதித்திருந்தது.

இந்த பின்னணியிலேயே, இறுதியாக தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடும் சந்தேகநபர்களுக்கு தோல்வியாக முடிந்தது.

அபு ஹம்ஸா மீது பணையக் கைதிகளை பிடித்துவைத்திருந்தமை, பயங்கரவாத பயிற்சி முகாமொன்றை அமைக்க முயன்றமை, ஆப்கானிஸ்தானில் புனிதப் போருக்கு அழைப்பு விடுத்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அபு ஹம்ஸா நியூயோர்க் மாநில விமானநிலையத்தை அடைந்து 24 மணித்தியாலங்களுக்குள் நீதிபதி ஒருவரின் முன்னால் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

அதன்பின்னர் அடுத்த கட்டமாக நடக்கவுள்ள ஏனைய நீதிமன்ற விசாரணைகள் முழுமையாக முடிய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.