ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நோபல் பரிசு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2012 - 17:16 ஜிஎம்டி
ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் 60 ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பாக நோபல் பரிசு கிடைத்தது

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொடுக்கப்படுவதாக நார்வேயின் நோபல் குழு தெவித்துள்ளது.

கடந்த அறுபது ஆண்டுகளாக ஐனநாயகத்தை வளர்ப்பது, மீள் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் போன்ற விடயங்களின் ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியம் உதவியதை சுட்டிக் காட்டிய நோபல் குழு பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட பின்னர் எழுந்த சூழலில் ஐரோப்பிய ஐன்றியம் அளித்த பங்களிப்பையும் பாராட்டியுள்ளது. போர்கள் நடக்கும் கண்டமாக இருந்த பிரதேசத்தை, அமைதி தவழும் பிராந்தியமாக மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவியிருப்பதாக நொபெல் பரிசுக்கான கமிட்டி தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு மெடிசன்ஸ் சான்ஸ் பிராண்டியே என்றழைக்கப்படும் எல்லைகள் கடந்த மருத்துவர்கள் என்கிற அமைப்புக்கு இதே போன்றதொரு அமைதிக்கான நொபெல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த பரிசை அறிவிக்கும் போது நோபெல் பரிசுக்கான குழுவின் தலைவர் தோர்ப்ஜோயர்ன் ஜக்லண்ட், ஐரோப்பிய ஒன்றியம் தற்போது பொருளாதார சிக்கல்களையும் சமூக ஒழுங்கின்மையையும் சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

ஆனால் அதேசமயம் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னணியில் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்ட விதத்தை ஜக்லண்ட் பாராட்டினார்.

இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மூத்த தலைவர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அதில் இருக்கும் 50 கோடிமக்களுக்கும் இந்தப் பரிசு மிகப்பெரிய கவுரவம் என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோசோ.

வரலாற்றிலேயே மிகப்பெரிய சமாதான நடவடிக்கையை முன்னெடுத்த அமைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமே இந்த பரிசு என்று கூறியிருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஹெர்மன் வான் ரம்பி.

அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் பலரும் இதை விமர்சித்திருக்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் யூகிப் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நைஜல் பாரேஜ், ஐரோப்பிய ஒன்றியத்தை முந்தைய பிரியாத யுகோஸ்லாவியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் இப்படி இணைந்திருப்பது அமைதியையும், சுமுகத்தன்மையையும் கொண்டுவருவதற்கு பதிலாக கிளர்ச்சிகளையும், வன்முறையையுமே அதிகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் அவர்.

அதேசமயம், இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் காலகட்டம் கொஞ்சம் விசித்திரமான காலகட்டம் என்று கூறுகிறார் பிபிசியின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான செய்தியாளர் மாத்யூ பிரைஸ். ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏகப்பட்ட பிளவுகளுடனும் மிகவும் பலவீனமாகவும் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும் காலகட்டத்தில் இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக கூறுகிறார் அவர்.

நோபெல் பரிசு கடந்த காலங்களிலும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அமெரிக்க படைகள் இரண்டு போர்களில் ஈடுபட்டிருந்தபோது அதன் அதிபர் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.