ரோஹிஞ்சா அகதிகளுக்கு அவசர மனித நேய உதவிகள் தேவை: ஐநா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 அக்டோபர், 2012 - 12:58 ஜிஎம்டி
பர்மா ரோஹிஞ்சா அகதிகளின் எரிக்கப்பட்ட இடங்கள்

பர்மா ரோஹிஞ்சா அகதிகளின் எரிக்கப்பட்ட இடங்கள்

பர்மாவின் மேற்குப் பகுதியிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் அண்மையில் நடந்த வன்முறைகளின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐநா மன்றம் கூறுகிறது.

ரக்கைன் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசாங்க அதிகாரிகளோடு சென்று பார்வையிட நேற்று சனிக்கிழமை ஐநா குழுவொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பெருமளவான அழிவுகளையும் சேதங்களையும் தாங்கள் காண நேரந்ததாக ஐநா குழுவினர் கூறுகின்றனர்.

குறைந்தது 22 ஆயிரம் பேர் வீடுவாசல்களை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது என பர்மீய அரசாங்கம் மதிப்பிடுகிறது.

ஆனால் எண்ணிக்கை இதனினும் அதிகமாக இருக்கலாம் என ஐநா அகதிகள் உதவி அமைப்பின் பர்மீயப் பிரதிநிதி ஹன்ஸ் டென் ஃபெல்ட் பிபிசி பர்மீய சேவையிடம் கூறினார்.

மதத்தால் முஸ்லிம்களான ரோஹிஞ்ஞா சிறுபான்மை சமூகத்தாருக்கும், அப்பகுதியிலே வாழும் பௌத்த மதத்தினருக்கும் இடையில் கடந்த ஜூனில் ஆரம்பித்த இந்த வன்முறை காரணமாக இதுவரையில் மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர நேர்ந்துள்ளது.

வீடு வாசல்களை விட்டு வெளியேறியவர்கள் அழுக்கு நிறைந்த தற்காலிக முகாமகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் கடந்த ஒருவாரத்தில் வெளியேற நேர்ந்தவர்கள் படகுகளிலும், குட்டித் தீவுகளிலும், ஒதுக்குப்புறமான மலை முகடுகளிலும்போய் தஞ்சமடைய நேர்ந்துள்ளது.

இவர்களுக்கு உடனடியாகவும் மிக மிக அவசியமாகவும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐநா நம்புகிறது .

வன்முறையிலிருந்து தப்பிக்க படகில் ஏறி கடலில் பயணித்த ரோஹிஞ்சா இன மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் காணாமல்போயுள்ளதாகவும் சில அரசுசாரா உதவி அமைப்புகள் கூறுகின்றன.

இந்தப் பிரச்சினையில் ரோஹிஞ்சா இன முஸ்லிம்கள் மட்டுமல்லாது முஸ்லிம் அல்லாத சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறுகிறது.

ஆனால் அதிக பாதிப்பு ரோஹிஞ்சாக்களுக்குத்தான் என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

ரோஹிஞ்சாக்கள் பல தலைமுறைகளாக ரக்கைன் மாகாணத்தில் வாழ்ந்துவருகின்றனர் என்றாலும் இவர்கள் வங்கதேசத்திலிருந்து பர்மாவுக்குள் சட்டவிரோதமாக வந்துக் குடியேறியர்கள் என்று கூறி பர்மீய அரசு அவர்களை தசாப்தங்கள் காலமாக புறந்தள்ளி வருகிறது.

ரோஹிஞ்சாக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டும், ஊரை விட்டு விரட்டப்பட வேண்டும் என ரக்கைன் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி வெளிப்படையாகவே குரல்கொடுத்து வருகிறது.

பர்மீயர்கள் பலரும் இதே எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.